வியாழன், 18 மே, 2023

‘அவர்கள்’ மட்டுமா பிச்சைக்காரர்கள்?!


கோயிலுக்குப் போகிறவர்களின் சீரிய சிந்தனைக்கு.....

“நீங்கள் சாமி கும்பிடப் போவது எதற்காக?”

“வரவிருக்கும் தேர்வை நன்றாக எழுதி நல்ல மதிப்பெண் வாங்கணும்.”

“நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கணும்.”

“கல்யாணம் ஆகணும்.”

“தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்கணும்.”

"தீராத நோய் குணமாகணும்"

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கோரிக்கை வைக்கத்தான் கோயிலுக்குப் போகிறீர்கள்.

“ஆண்டுக்கு எத்தனை முறை போவீர்கள்?” என்பது உங்களுக்கான அடுத்த கேள்வி.

“மாதம் ஒரு முறை.....” 

“விசேச நாட்களில்.....”

“அவ்வப்போது.....”

இப்படியாக நீங்கள் தரும் பதில்களிலிருந்து, நீங்கள் நாள்தோறும் கோயிலுக்குப் போவதில்லை என்பதை யூகிக்க முடிகிறது[விதிவிலக்காக மிகச் சிலர் இருக்கலாம்].

ஆக, “எப்போதாவதோ அவ்வப்போதோ கோயிலுக்குப் போய், சாமிகளிடம் சமர்ப்பிக்கிற உங்களின் கோரிக்கை, அல்லது கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறா” என்று நான் சொன்னால் கோபிக்காதீர்கள்.

எந்த அடிப்படையில் நான் இப்படிச் சொல்கிறேன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். 

சொல்கிறேன்.

கோயில் என்றால் அங்கே பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். பிச்சைக்காரர்கள் இல்லாத கோயில்களே இல்லை என்றும் சொல்லலாம்[பிரபலம் ஆகாத கிராமப்புறக் கோயில்கள் விதிவிலக்கு].

இங்குப் பிச்சை எடுப்போரெல்லாம் பிறவிப் பிச்சைக்காரர்கள் அல்ல. பார்த்த வேலையில் போதிய வருமானம் இல்லாமலோ, செய்த தொழில் நொடித்துப்போனதாலோ கோயில் கோயிலாகச் சென்று சாமிகளிடம் கோரிக்கை வைத்து.....

அவை நிறைவேறாத நிலையிலும், உற்றார் உறவினரால் கைவிடப்பட்ட நிலையிலும்[இவை போல நிறையக் காரணங்கள் உள்ளன] பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்னுமொரு கட்டத்தில் இத்தொழிலை மேற்கொண்டவர்கள்[இதை நன்கு மனதில் பதிய வையுங்கள்].

தங்களின் தொழிலுக்கான[பிச்சை எடுத்தல்] இடமாகக் கோயிலின் வாயிலை இவர்கள் தேர்வு செய்யக் காரணம்.....

கோயில்களில் குடியிருக்கும் கடவுளர்கள் கருணையுள்ளம் கொண்டவர்கள்[பிச்சை எடுக்கும் நிலையிலும் கடவுள் மீதான நம்பிக்கையை இழக்காதவர்கள்] என்பதோடு, அங்கு வருகிறவர்களும் இரக்கக் குணம் கொண்டவர்கள் என்பதால் நிறையப் பிச்சை கிடைக்கும் என்று எண்ணுவதுதான். வயிறாரச் சாப்பிட்டு, கொஞ்சம் வசதியோடு வாழலாம் என்று நம்புவதும் காரணம் எனலாம். 

இந்த நம்பிக்கைகள் ஓரளவுக்கேனும் பலித்தனவா? பலிக்கின்றனவா?

இல்லை[“ஆம்” என்று சொல்வதற்கான ஆதாரம் ஏதும் நம்மிடம் இல்லை; ஆய்வுகளும் நிகழ்த்தப்படவில்லை]. 

அன்று பிச்சை எடுத்தவன் இன்றும் பிச்சைக்காரனாகத்தான் இருக்கிறான். போதுமான அளவுக்குப் பிச்சை கிடைக்காதவன் பட்டினி கிடந்து செத்தொழிகிறான்.

நாட்டில் எத்தனை எத்தனைப் பிச்சைக்காரர்கள்! அத்தனை பேரையும் இந்தவொரு அவல நிலைக்கு ஆளாக்கியவர்கள் இந்தக் கடவுள்கள்தானே?[கடந்த பிறவிகளில் செய்த பாவபுண்ணியம் என்னும் சமாளிப்பு இங்குத் தேவையில்லை].

அவர்கள் வயிற்றுப்பாட்டுகாகக் கையேந்துகிறார்கள். நாமெல்லாம் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவும் பிற தேவைகளை நிறைவேற்றவும் கடவுள்களிடம் கையேந்துகிறோம்[இதுவும் ஒருவகைப் பிச்சைதான்; கௌரவப் பிச்சை! ஹி... ஹி... ஹி!!!]; கைகூப்பித் தொழுகிறோம்.

அவர்களுக்குக் கருணை காட்டாத கடவுள்கள் நம் மீது கருணை மழை பொழிவார்கள் என்பது என்ன நிச்சயம்?!

புதன், 17 மே, 2023

லஞ்சப் பணப் பகிர்வும் வஞ்சிக்கப்பட்ட ‘பாஜக’வும்!!!

சேலம், ஏற்காடு ஊராட்சிக்குச் சொந்தமான 20[23?] கடைகள் ஏலம் விடப்பட்டன.

அதற்கான விதிமுறைகளில் தில்லுமுல்லு செய்து, ஒரு கடைக்கு ரூ1.75 லட்சம் வீதம் 70கடைகளுக்கும் 32 லட்சம் பெறப்பட்டது[கடந்த 2021இல், 13 கடைகளுக்கு 30 லட்சம் - மாலைமலர்].

இச்செய்தி, இன்று காலை 9.30 மணிக்கு ‘News தமிழ்’ தொ.கா.வில் வெளியானது.

லஞ்சமாகப் பெற்ற பணத்திலிருந்து, ‘திமுக’வுக்கு 5 லட்சம், ‘அதிமுக’வுக்கு 4 லட்சம், ‘தேமுதிக’வுக்கு 1 லட்சம், ‘பாஜக’வுக்கு ரூ50,000 கையூட்டாக[லஞ்சம்]பகிர்ந்துகொள்ளப்பட்டது[ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கும் பகிரப்பட்டது].

பகிர்ந்தளித்தவர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராஜா ஆவார்.

இம்மாதிரி, ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்யும்போது, கட்சிக்காரர்கள் அரசு அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஊழல் புரிவது வழக்கமாக நடைபெறுகிற ஒன்று என்பதால் இது குறித்துக் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை.

நம் வருத்தமெல்லாம், லஞ்சப் பணத்தைப் பங்கிடுவதில், நாட்டை ஆளும் பெரியதொரு கட்சி]பாஜக] 4ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, வெறும் ரூ50,000 மட்டுமே லஞ்சப் பணம் தரப்பட்டுக் கேவலப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான்.

இது விசயம் தமிழ்நாடு ‘பாஜக’ தலைவர் அண்ணாமலை அவர்களுக்குத் தெரியாமலிருந்தால் தெரியப்படுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம் ஆகும்.

இனியும், மேற்கண்ட கட்சிகளுக்கிடையே ‘பஞ்சப் பகிர்வு’ செய்திட நேருமாயின், ‘திமுக’ உள்ளிட்ட கட்சிகள் பெறும் பங்கைவிடவும் ‘பாஜக’வுக்கு ஒரு ரூபாயேனும் அதிகம் வழங்கப்படுவது அவசியம்.

அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில் அண்ணாமலை அவர்கள் முனைப்புக் காட்டுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

‘திமுக’ தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு உடன்பட மறுப்பாரேயானால், புதிய புதிய ஆடியோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு, திமுகவின் உட்கட்சிப் பூசலையும், அடிக்கும் கொள்ளைகளையும் அம்பலப்படுத்தினால், ஸ்டாலின் வழிக்கு வருவார் என்பது நிச்சயம்.

அண்ணாமலை அவர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது நாம் முன்வைக்கும் பரிந்துரை.

அரசியல் செய்வதில் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், லஞ்சம் வாங்குவதில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, லஞ்சப் பணத்தைப் பகிர்வதில் கட்சிக்காரர்கள் கடைப்பிடிக்கும் நேர்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது!

லஞ்சம் பங்கீடு... காணொலி: