ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

‘சனாதன தர்மம்’... எதிர்ப்பதும் அழித்தொழிப்பதும்!!!

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள்” என்று மாநாட்டை நடத்தியவர்களைப் பாராட்டியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு சட்டவிரோதமானது என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார் என்பது செய்தி.

அவர் தன்னுடைய புகாரில், //உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களைத் தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது.

இந்து மதத்தைக் கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். ஒரு இந்து என்ற வகையில் எனது உணர்வுகளை அவர் புண்படுத்தி இருக்கிறார்// என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘சனாதனம்’ என்பதற்கு, அதனைப் போற்றிப் பின்பற்றத்தக்க வகையில், இந்து அமைப்புகளால் ஏராள விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

சனாதனத்தை வெறுப்பவர்கள், "இந்தியச் சமூகத்தில் காலம் காலமாக புரையோடிக் கிடக்கும் சாதியமைப்புக்கு அடித்தளமாக அமைந்திருப்பது சனாதனம் என்னும் மனுஸ்மிருதி அல்லது வருணாசிரமக் கோட்பாடே ஆகும்” என்பது போல அதனால் விளையும் கெடுதிகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.

இவற்றில் எவர் தரும் விளக்கம் ஏற்புடையது என்று ஆராய்வது நம் நோக்கமல்ல.

எதிர்ப்பதற்கும் ஒழிப்பதற்குமான வேறுபாட்டை ஆராய்வதும், உதயநிதியின் பேச்சு குறித்து ஒரு ‘முடிவு’ எடுப்பதும்தான்.

பேய், பிசாசு போன்றவை இருப்பதாக நம்புவது மூடநம்பிக்கை.

அதை எதிர்ப்பதாகச் சொல்வதில் பயன் ஏதுமில்லை. ஒழிக்க வேண்டும் என்பதே அறிவுடைமை ஆகும்.

அதை ஒழிக்க வேண்டும் என்பதால், [மூடநம்பிக்கையைப்]பரப்புரை செய்பவரும் ஒழிக்கப்படுதற்கு உரியவர் என்று பொருள் கொள்வது தவறாகும்[கொரோனாவை ஒழிப்போம் என்று சொல்வதோடு, கொரோனா நோய்க்குத் தன் உடம்பில் இடமளித்தவரையும் ஒழிப்போம் என்று சொல்வதற்கு ஒப்பானது இது].

மக்களிடையே ஏர்றத்தாழ்வுகளைக் கற்பிப்பதால் சனாதனம் என்பதும் ஒரு மூடநம்பிக்கை என்றும், அது ஒழிக்கப்படுதல் வேண்டும் என்றும் சொல்கிறார்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர்.

அவர்களின் சிந்தனைப்படி அது ஏற்கத்தக்கதே.

சனாதனம் ஒழிக்கப்படுதல் வேண்டும் என்கிற அவர்கள், சனாதன தர்மத்தைப் போதிக்கிற இந்து மதத்தை[அது தர்மம் என்னும் பெயரில் வேறு எதையெல்லாமோ போதிக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று]யும் ஒழிக்கச் சொல்கிறார்கள் என்று பொருள்கொள்வது கண்டிக்கத்தக்கது.

இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்களையும் அவ்வாறு பேசி இழிவுபடுத்துகிறார்கள் என்று புகார் அளிப்பதும் தவறாகும்.

ஒரு சாரார், சனாதனத்தால் பெரும் தீங்கு விளைவதாக சொன்னால், “அது தவறு; அதனால் நாம் பெறும் நன்மைகள் உண்டு” என்று சனாதனம் போற்றுவோர்[குறிப்பாக, இந்து மதத்தவர்] வாதிடலாமே தவிர, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறநெறிக்கே[சனாதன தர்மம்] அவர்கள் எதிரானவர்கள் என்று காவல்துறையில் புகார் அளிப்பது போன்ற செயல் வரவேற்கத்தக்கது அல்ல.

* * * * *

https://www.bbc.com/tamil/articles/c90j1k5eqy2o

சனி, 2 செப்டம்பர், 2023

எடப்பாடி ‘பல்டி’[பழனி]சாமி!!!


தரையில் தவழ்ந்து சென்று, சசிகலாவின் தாள் பணிந்து 4 ஆண்டுகள் தமிழ்நாடு முதல்வராக இருந்தபோது, ஒன்றிய அரசின் ‘ஒரே நாடு! ஒரே தேர்தல்!’ திட்டத்தை எதிர்த்தார் எடப்பாடி ‘பல்டி’சாமி.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, முதல்வர் பதவிக்காகக் குடம் குடமாக ‘ஜொள்ளு’ வடித்துக்கொண்டிருக்கும் நிலையில், மத்தியப் ‘பாஜக’ அரசின் இன்றைய ‘ஒரே நாடு! ஒரே தேர்தல்!’ பஜனைக்கும் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார், தமிழ்நாட்டுப் ‘பாஜக’வின் ‘பாடிகார்டு’ எடப்பாடியார். 

‘ஒரே நாடு! ஒரே தேர்தல்!’ கொள்கையைப் பின்பற்றினால் தேர்தல் செலவு மிச்சமாகும் என்பதால் அதை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார்.

4 ஆண்டுகள் அனுபவித்த ‘பதவி சுகம்’ இப்படி அவரைக் ‘கரணம்’ போட வைத்திருக்கிறது. 

ஒட்டு மொத்த உடம்பிலும், மறையாததும் மறைக்க இயலாததுமான ஊழல் கறை படிந்திருப்பதால், ‘பாஜக’வின் இந்தத் திட்டத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை[அவ்வப்போது ‘பாஜக’ அரசை விமர்சிப்பதாகக் காட்டிகொள்கிறாரே தவிர, உண்மையில் அதை எதிர்க்குக் ‘தில்’ இவருக்கு இருந்ததில்லை; இருக்கப்போவதும் இல்லை] இவருக்கு.

‘ஒரே தேர்தல்’[5 ஆண்டுகளுக்கு ஒருமுறை] நடைமுறைப்படுத்தப்பட்டு, அடுத்துவரும் தேர்தலில் ‘பாஜக’ வென்று நடுவணரசைக் கைப்பற்றினால், மாநில ஆட்சியைக் கைப்பற்றும் மாற்றுக் கட்சி அரசை, ஏதேனும் ஒரு சப்பைக் காரணம் காட்டிக் கலைத்துவிட்டு, அடுத்த தேர்தல் வரும்வரை குடியரசுத் தலைவர் ஆட்சியைப் அது அமல்படுத்தும்.

இவர் உட்பட ஒட்டுமொத்த அ.தி.மு,க.வையே விலைக்கு வாங்கும்  அதிசயம், அக்கிரமம் எல்லாம் நடக்கக்கூடும்.

தன்னால் நியமிக்கப்படும் ஆளுநர் மூலம் 'பாஜக'வே ‘அடாவடி’ ஆட்சி நடத்த முடியும் என்னும் கசப்பான உண்மையை எடப்பாடியார் அறியாமல் போனது பரிதாபம்.

இவரே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும், ‘பாஜக’ அதில் அங்கம் வகித்திட ஆசைப்பட்டுப் பங்கு கேட்கும்.

துணை முதல்வர் பதவி கேட்கலாம்; இரட்டைப்படையில் உறுப்பினர்கள் தேர்வு பெற்றுவிட்டால், முதல்வர் பதவிக்குக்கூட குறி வைக்கலாம்.

பிற இனத்தவனின் அடி வருடாமல், இயன்றவரை தன்மானத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது தமிழினம்.

சுய சுகத்துக்காக அந்தத் தன்மானத்தை அடகு வைத்திட வேண்டாம் என்று தமிழன் என்ற வகையில், எட்டரை மாற்றுத்[தங்கம்] தமிழன் எடப்பாடியாரை அன்புடன் வேண்டுகிறோம்.

நம் வேண்டுதலைப் புறக்கணித்தால்.....

“அடுத்த தேர்தலுக்குப் பிறகு முகவரியை முற்றிலுமாய் இழப்பீர்கள்” என்று எச்சரிக்கையும் செய்கிறோம்!