சனி, 4 நவம்பர், 2023

அச்சுறுத்தும் ‘வாய்வழிச் செதிள் உயிரணுப் புற்றுநோய்’!!![பகிர்வு]

மனித உடலில் புற்றுநோய் தாக்காத உறுப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மூளை, கண்கள், மூக்கு பல் எயிறு, கழுத்து, நுரையீரல், இதயம், இரைப்பை, குடல், சிறுநீரகம், பிராஸ்டேட் சுரப்பி, பிறப்புறுப்பு, மலக்குடல் முதலானவற்றை அது பாதிக்கிறது.

இணையத்தில் உலாவியபோது, சுவையுணர் உறுப்பான நாக்கைத் தாக்கும் ‘வாய்வழிச் செதிள் உயிரணுப் புற்றுநோய்’['Oral squamous cell carcinoma']பற்றி அறிய முடிந்தது.

இதன் மூலம் மனதில் அச்சம் பரவியது என்றாலும், தன்னைப் பாதித்த நாக்குப் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்ற ஒரு மாடல் அழகியின் புகைப்படத்தைப் பார்த்தபோது உடம்பு சிறிது நேரம் நடு நடுங்கியது.

மிக மென்மையான மனம் படைத்தவர்கள் அவளின் அழகு முகத்தை ரசிப்பதைத் தவிர்த்து, இந்நோய் குறித்த குறிப்புரைகளை மட்டும் வாசிப்பது அவர்களின் மனநலம் காக்க உதவும்.

                              *   *   *   *   *

45 வயதான எல்லி பிரவுன் ஹென்டர்சன்[மாடல் அழகி], நெவாடாவைச் சேர்ந்தவர், 

வழக்கமான உடல் பரிசோதனைக்கு மருத்துவமனை சென்றபோது, இவருக்கு ‘வாய்வழிச் செதிள் உயிரணுப் புற்றுநோய்’ இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், நாக்கிலிருந்த கட்டியோடு சேர்த்து இவரது நாக்கின் ஒரு சிறிய பகுதி துண்டிக்கப்பட்டது.

ஆனால், ஓர் ஆண்டு கழித்து அவளின் காதில் 'தாங்க முடியாத' வலி உண்டானது.

பரிசோதித்த மருத்துவர், ‘நாக்குப் ​​புற்றுநோய்’[‘வாய்வழிச் செதிள் உயிரணுப் புற்றுநோய்’]  மீண்டும் தாக்கியிருப்தாகவும், அது மூன்றாம் நிலையில் இருப்பதாகவும், அதாவது, அது அவளுடைய நிணநீர் முனைகளுக்குப் பரவியுள்ளதாகவும் தெரிவித்தார்; அறுவைச் சிகிச்சையின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார்.

அறுவை மருத்துவர்கள் அவள் நாக்கின் பாதியையும் தாடையின் ஒரு பகுதியையும் இரு கூறுகளாக்கி, உரிய சிகிச்சைக்குப் பிறகு, திசுக்கள் மற்றும் எலும்பைப் பயன்படுத்தி அவற்றை ஒட்டினார்கள். இதனால், அவள் முகம் வீங்கியது என்றாலும் பின்னர் இயல்புநிலைக்குத் திரும்பினார்[She was sent for a 12-hour procedure where doctors cut out half her tongue and part of her jaw before rebuilding them using tissue and bone from her leg — an operation which caused her face to swell].

வெள்ளி, 3 நவம்பர், 2023

தமிழ்நாடு அரசே, இனியும் இப்படித் தமிழை இழிவுபடுத்தாதே!!!

//தமிழில் பெயர்ப்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூ2000 அபராதம்// 

இது சற்று முன்னர்[07.30] ‘சன்’ தொலைக்காட்சியில் வெளியான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு, அதாவது, வணிக நிறுவனங்களுக்கான எச்சரிக்கை; மிரட்டல் என்றும் சொல்லலாம்[உண்மையல்ல].

இந்த அறிவிப்பு அவ்வப்போது[பல ஆண்டுகளாக] வெளியாகிறது என்பது தமிழறிந்த யாவரும் அறிந்ததே.

பயன்?

ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்ற பெயர்ப் பலகைகள் பலவும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

பலர், ஆங்கிலத்துக்கு கீழே, எட்ட நின்று பார்த்தால் கண்ணுக்குத் தெரியாத அளவில் தமிழுக்கும் இடம் தருகிறார்கள்.

இவ்வாறெல்லாம் தமிழை அவமதித்தால் ரூ2000 அபராதமாம்.

இந்த அறிவிப்பு வணிகர்களை மிரட்டவா, தமிழை அவமதிக்கவா?

இந்த அறிவிப்பு வெளியாகத் தொடங்கிய நாளிலிருந்து எத்தனைக் கடைக்காரர்களிடம் ரூ2000 அபராதமாக வசூலிக்கப்பட்டது? அபராதம் செலுத்தியதால் எத்தனை வணிகர்கள் மனம் திருந்தித் தமிழில்[பெரிய எழுத்துகளில்] பலகை வைத்தார்கள்?

இல்லை. மாற்றம் ஏதும் நிகழவே இல்லை. 

ரூ2000 என்பது வணிகர்கள் சில நிமிடங்களில் சம்பாதிக்கும் அற்பத் தொகை[விதிவிலக்கானவர்கள் இருக்கலாம்].

நகராட்சி ஊராட்சி போன்றவற்றின் அதிகாரிகளுக்கும், வணிகவரிக்காரர்களுக்கும் அவர்கள் கொடுக்கும் ‘மாமூல்’ தொகையுடன் ஒப்பிட்டால், இது வெறும் தூசு.

தமிழில் எழுதாதற்காக அபராதம் செலுத்த நேர்ந்தாலும், அவர்கள் செலுத்தும் அந்தத் தொகை தமிழ்நாடு அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ போடப்படும் ‘பிச்சை’[அற்பத் தொகை]யாகும்.

அப்புறம் எதற்கு அவ்வப்போது வணிகர்களுக்கான இந்தவொரு எச்சரிக்கை?

இது, தமிழை வாழவைக்கும் செயலா, அவமதிக்கும் சடங்கா?

இந்தச் சடங்கைச் செய்யுமாறு தமிழர்கள் கோரிக்கை வைக்கிறார்களா? போராட்டம் நடத்துகிறார்களா?

இல்லை. காரணம், அண்டை மாநிலத்துக் கன்னடக்காரனுக்கு இருக்கும் மொழிப்பற்றில் பத்தில் ஒரு பங்குகூட இவர்களுக்கு இல்லை.

கர்னாடகாவில் கன்னடம் இடம்பெறாத பெயர்ப்பலகையே இல்லாததற்குக் காரணம், வணிகர்களுக்கு அவர்கள் தந்த மிரட்டல்; கன்னடம் இல்லாத பலகைகளை அடித்து நொறுக்கியது.

தமிழர்களுக்குத் தமிழ்ப்பற்று[போதுமான அளவுகூட] இல்லை. தமிழ் தமிழ் என்று அனைத்துத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும்[திமுக உட்பட] மேடைகளில் வாய் கிழியக் கத்துவது வழக்கமாகிப்போன ஒரு பழக்கம். அதைச் செய்யாவிட்டால் தமிழர்கள் ஓட்டுப் போடமாட்டார்கள் என்பதெல்லாம் இல்லை.

எனவே.....

தமிழ்நாடு அரசுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது, உண்மையில் அனைத்துப் பெயர்ப் பலகைகளிலும் தமிழ்[பெரிய எழுத்தில்] இடம்பெற வேண்டுமானால்.....

அபராதத் தொகையைக் குறைந்தபட்சம்[நிறுவனத்தின் தரத்தைப் பொருத்துத் தொகை மாறுபடலாம்] ரூ20000[இருபதாயிரம்] என்று உயர்த்துங்கள்.

கையூட்டுப்[லஞ்சம்] பெற்றுக்கொண்டு அபராதம் வசூலிக்கத் தவறும் அதிகாரிகளைத் தண்டியுங்கள்.

இவற்றில் எதுவும் சாத்தியப்படவில்லை என்றால், மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான வழிவகைகளைக் கையாளுவதில் கவனம் செலுத்துங்கள்.

மாறாக, ‘பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லையென்றால் ரூ2000 அபராதம் விதிக்கப்படும்’ என்பதான  அறிவிப்புகளை வெளியிட்டுத் தமிழை அவமானப்படுத்தாதீர்கள்.