செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

இரவு பகலாய் ஆயுதப் படைப் பாதுகாப்பு! சாமி தரிசனம் எதற்கு?

//பிரதமர் மோடி திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு, கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு[பல்லடம்]ச் செல்லும் மோடி  பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மதுரை செல்கிறார். 

7 மணிக்குத் தனியார் விடுதி ஒன்றில் தங்கும் அவர், இரவு 9.10 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் பள்ளியறைப் பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்கிறார்//


இது இன்று ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ள செய்தி.


ஒரு பிரதமராக, நாடெங்கும் நாட்கணக்கில் பயணம் செய்வதும், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் வழக்கமானதே என்பதால், காவலர் பாதுகாப்புக் குறித்துக் கருத்துச் சொல்வது தேவையற்றது.


ஆனால், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வருவதால், இன்று மாலை 4.30 மணியிலிருந்து நாளைவரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீதிகளில் கடைகளைத் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது[இவர் அம்மனின் செல்லப்பிள்ளை?!].


கோயில் கோபுரங்களில் ஏறி நின்று, தூக்கிப் பிடித்த துப்பாக்கிகளுடன் படை வீரர்கள் காவல் காக்கிறார்கள் என்பதோடு, மோப்ப நாய்களுடன் பலத்த பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது’ என்னும் இந்தக் கூடுதல் செய்திதான் நம் அடிமனதை உறுத்துகிறது.


தலைமைப் பொறுப்பிலுள்ள இவருக்கும் இவரைப் போன்றவர்களுக்கும் நாள் முழுக்க இம்மாதிரி ஆயுதப் படையின் பாதுகாப்பு தேவைதான், இவர்கள் முழுக்க முழுக்க கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தால்.


மோடி மிக மிக மிக மேலான அதிதீவிரக் கடவுள் பக்தர்.


கோயில் கோயிலாகச் சென்று குனிந்து குனிந்து கும்பிடுவதையும், நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் கவிழ்ந்து சாமி தரிசனம் செய்பவதையும் வழக்கமாக்கியவர்.


இவர் வழிபடும் கடவுள்கள் இவரையும் இவரைப் போன்ற உயர் மட்டத் தலைவர்களையும், காலமெல்லாம் கண்ணுங்கருத்துமாய்ப் பாதுகாப்பது அவசியம்.


அந்தக் கடவுள்கள் இதைச் செய்வதில்லை என்பதால்தான் இவர்களுக்குக் காவல் படைகளின் கட்டுக்காவல் தேவைப்படுகிறதா?


“ஆம்” என்றால்.....


நம் கேள்வி:


இவர்கள் கடவுள்களைத் தொழுவது மரணத்திற்குப் பிறகு சொர்க்கத்தில் இடம் பெறுவதற்கு மட்டும்தானா?


மோடியையும் இன்ன பிற பக்தியுள்ளம் கொண்ட பிரபலங்களையும் நக்கலடிப்பது நம் நோக்கமல்ல. நம் உள்மனதிலிருந்து எழுந்த 100% உண்மையான கேள்வி இது.

                                    

திங்கள், 26 பிப்ரவரி, 2024

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு..... தமிழர்கள் மீதான வடவர்களின் ஆதிக்கம் கூடுமா, குறையுமா?

தேர்தல்களில் அரசியல் கட்சிகளுக்கு, வெற்றி ஈடுவதற்கான வியூகங்களை அமைத்துக் கொடுப்பதில் வல்லவர் ‘பிரசாந்த் கிஷோர்’ என்பது பலரும் அறிந்ததே.

குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி தொடர, அவருக்கு வியூகம் அமைத்தவர் இவர்.

2014 மக்களவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்கான வழிவகைகளைப் பாஜகவுக்கு வகுத்துத் தந்தவரும் இவரே.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை வெற்றிகளை ஈட்டுவதற்குக் காரணமாக இருந்தவரும் இவரே என்பதால், இவரின் ஆலோசனையைப் பெற்றால் வெற்றி நிச்சயம் என்னும் நம்பிக்கை அரசியல் தலைவர்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இவர் மீதான நம்பிக்கையால்தான் மு.க. ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தலில், இவர் வகுத்தத் தந்த வியூகத்தை நடைமுறைப்படுத்தி, வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார்.

ஆக, ‘தேர்தல் முடிவுகள் பற்றிய பிரசாந்த் கிஷோரின் கணிப்புகள் பெரும்பாலும் பலிக்கும் என்பது உறுதி’ என்னும் நிலையில்.....

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் எட்டு முதல் 12 சதவித அளவில் வாக்குகளைப் ‘பாஜக’ பெறும்[இதுவரை பாஜகவுக்கு இங்கு ஐந்து சதவிகிதம்வரை மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளன]’ என்று இவர் கணித்துச் சொல்லியிருப்பது[https://www.hindutamil.in/news/india/1206165-double-digit-vote-percentage-for-bjp-in-tamil-nadu-prashant-kishor-prediction-2.html] நம்மைப் பெரும் கவலையில் ஆழ்த்துகிறது.

தமிழ்நாட்டில் செல்லாக் காசாக இருந்த... இருக்கும் பாஜக பெறவுள்ள வாக்குகள் அதிகமானால், மூடநம்பிக்கையாளர்கள் மிகப் பெருவாரியாக உள்ள வட மாநிலங்களில் அது பெறும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

தொடர்ந்து இந்தியாவைப் ‘பாஜக’வே ஆளும் என்றும் உறுதிபடச் சொல்லலாம்.

அதன் விளைவு.....

நம் மாநில அரசுக்குரிய பல உரிமைகளைப் பறித்தததால் நாம் வடவர்களின் 90% அடிமையாக உள்ளோம்[பிற தென்னிந்திய மாநிலத்தவர் பற்றி நமக்குக் கவலையில்லை]. இனி, 100% அடிமைகளாக மாற்றப்படுவோம் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.

ஆகவே, தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு நாம் மிக மிகப் பணிவுடன் முன்வைக்கும் வேண்டுகோள்:

“உங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளையும், காழ்ப்புணர்ச்சிகளையும் தற்காலிகமாகவேனும் ஒதுக்கிவைத்து, ‘பாஜக’வின் வாக்குச் சதவீதம் எவ்வகையிலும் அதிகரித்துவிடாமல் தடுப்பதில் முழு மனதுடன் ஈடுபடுங்கள்.”

தவறினால்.....

உண்மைத் தமிழர்கள் ஒருபோதும் உங்களை மன்னிக்கமாட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!