ஞாயிறு, 2 ஜூன், 2024

கருத்துக் கணிப்பும் ஊடகக் கேடர்களும்!!!

தேர்தல் முடிவுகள் பற்றியக் கருத்துக் கணிப்புகள் இன்று[02.06.2024] வெளியாகியுள்ளன. ‘முடிவுகள்’ நாளை மறுநாள்[04.06.2024] வெளியாகவுள்ளன.

இரு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது.

ஆட்சியைக் கைப்பற்றும் கட்சி[கள்] ஆதரவாளர்கள் ஒரு நாள் முன்னதாகத் தங்களுக்குள் மகிழ்ச்சியைப் பகிர்வார்கள். தோற்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் கவலைக்குள்ளாவது ஒரு நாள் முன்னதாகவே ஆரம்பமாகும்.

மற்றபடி, கட்சிச் சார்பில்லாத பொது மக்களுக்கு இதனால் விளையும் பயன் என்ன?

எதுவுமே இல்லை.

அப்புறம் எதற்கு இந்தத் தேர்தலுக்குப் பிறகான கருத்துக் கணிப்பு?

யாருக்கும் விடை தெரியாது, கருத்துக் கணிப்பு நடத்திய ஊடக உரிமையாளர்களைத் தவிர.

இவர்களுடையது அச்சு இதழ்களாயின் விற்பனை பெருகும். இணைய இதழ்களாயின் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் அதிக விளம்பரங்கள் பெற்று வருமானத்தைப் பெருக்குவார்கள்.

இவர்களின் இந்தச் செயலால் பலரின் நேரம் விரையமாகிறது; கட்சிச் சார்புடையோரிடையே வீண் விவாதங்கள் நிகழும். அவை காரணமாக மோதல்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. 

சுருங்கச் சொன்னால்.....

தேர்தலுக்குப் பிறகான ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது உறுதி[தேர்தலுக்கு முற்பட்ட கருத்துக் கணிப்பு தனி ஆய்வுக்குரியது].

ஊடகக்காரர்கள் திருந்த வேண்டும். தவறினால், மக்கள் அவர்களைத் திருத்த வேண்டும்.

சனி, 1 ஜூன், 2024

தொடரும் தியானம்! மோடியின் உள்நோக்கம் என்ன?

#பிரதமரின் தியானம்[விவேகானந்தர் மண்டபத்தில்] இன்னும் தொடர்கிறது. அவர் நாளை மதியத்துக்குப் பின்னர் கரை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது#

மேற்கண்டது ஊடகச் செய்தி.

இந்தச் செய்தி நம் நெஞ்சில் மிகப் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்தது.

தேர்தல்தான் முடிந்துவிட்டதே, அப்புறம் எதற்கு இந்தத் தொடர் தியானம்?

மக்கள், இந்தியா கூட்டணிக்கு[மோடிக்கு எதிராக] அதிக அளவில் வாக்களித்திருந்தால், தன்னுடைய இந்தத் தொடரும் தியானத்தை மெச்சி, எதிரணிகளுக்குப் போடப்பட்ட அத்தனை வாக்குகளையும்[அல்லது, தேவையான அளவுக்கு] பாலராமர் ‘பாஜக’வுக்கான வாக்குகளாக இடம்பெயரச் செய்வார் என்று நம்புகிறாரா மோடி?

அல்லது,

விதம் விதமான பக்தி வேடம் புனைந்து தியானத்தில் ஈடுபட்டது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக அல்ல என்று மக்களை நம்பச் செய்வதற்காகவா?

காரணம் எதுவாகவோ இருந்து தொலைக்கட்டும், மோடி கட்சி படுதோல்வி கண்டது என்னும் செய்தி ஜூன்4ஆம் தேதிக்குப் பிறகு தெரியவந்தால், மோடி அவர்களுக்கு நாம் வழங்கும் பரிந்துரை…..

வாழ்நாள் முழுதும் விவேகானந்தர் மண்டபத்திலேயே தொடர்ந்து ஆழ்மன தியானத்தில் அவர் ஈடுபடலாம்.

ஈடுபட்டால்.....

எப்போது வைகுண்டத்திற்கான ஆன்மிகப் பயணத்தை அவர் மேற்கொண்டாலும், பாலராமனின் அருளால் அங்கே அவருக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது உறுதி!

வாழ்க மோடி! வளர்க அவரின் பாலராமர் பக்தி!!

*   *   *   *   *

https://www.dinamalar.com/templenews/144031