செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

மரணத்தில் என்ன வீரமும் வெங்காயமும்!

இறத்தல், உயிர்துறத்தல், சாதல் போன்றவை மரணத்தைக் குறிக்கும் பிற சொற்கள்.

நோய், தீராத வறுமை, விபத்து, தற்கொலை, இயற்கைப் பேரிடர் என்று மரணத்திற்கான காரணங்கள் பலவாக உள்ளன. பகை நாடுகள் தமக்குள் நிகழ்த்தும் போரும் இவற்றுள் அடங்கும். 

மரணத்தை விரும்பி ஏற்பார் எவருமில்லை.

போருக்குச் செல்லும் படை வீரர்களில் எந்தவொருவனும் மரணத்தைத் தழுவும்[அது நேர்ந்தால்] அந்தக் கணங்களில், “என் நாட்டிற்காக என்  உயிரைத் தியாகம் செய்கிறேன்”  என்று பெருமிதம் கொள்வது சாத்தியமில்லை; மிஞ்சுவது வேதனைதான்.

தனிப்பட்ட இருவர் அடித்துக்கொண்டால் அது அடிதடி, அல்லது மோதல்.

பகை நாடுகளின் வீரர்கள் சண்டையிட்டுக்கொண்டால் அது போர்.

தனிப்பட்டவர்கள் மோதலில் ஒருவரோ இருவருமோ உயிரிழக்க நேர்ந்தால் அது மரணம். போரில் நிகழ்வதும் மரணம்தான்.

மரணித்தால் மண்ணாவது, அல்லது சாம்பலாவது இயல்பு. இதில் ஏது ஏற்றத்தாழ்வு?

வீரமரணம் எய்தியவன் சொர்க்கம் சேர, கொல்லப்பட்டவன் நரகத்தில் தள்ளப்படுவானா?

தங்கள் தரப்பு ஆள் செத்தால் ‘வீரமரணம்’ எய்தினான் என்பதும், எதிரித் தரப்பினன்[அல்லது தீவிரவாதி எனப்படுவோன்] சாவைத் தழுவினால் அவன் கொல்லப்பட்டான் என்பதும் காலங்காலமாக தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்! [‘தங்கள் தரப்பில் இத்தனைப் பேர் மரணம், எதிரித் தரப்பினரின் எண்ணிக்கை இது’ என்று குறிப்பிடுவதே ஏற்புடையது ஆகும்].

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

அய்யோ பாவம் நாமக்கல் ஆஞ்சநேயர்!!!

 முட்டைப் பண்ணைத் தொழில், சுமையுந்துக்[லாரி] கட்டுமானம் போன்றவற்றால் ‘நாமக்கல்’ பிரபலம் அடைந்திருந்தாலும், இதற்குப் பெருமளவில் பெருமை சேர்ப்பது உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயக் கடவுள் இங்கே எழுந்தருளியிருப்பதுதான்.

நேற்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி 1008 லிட்டர் பாலைப் பொழிந்து அவருக்கு அபிஷேகம் செய்திருக்கிறார்கள் அர்ச்சகர்கள்.

அனுமன் ஜெயந்தி முதலான விசேட நாட்களில்[காண்க: படம்] நல்லெண்ணை, சிகைக்காய், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றாலும் அபிஷேகம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

கற்சிலைக்குள் இரண்டறக் கலந்திருக்கும் ஆஞ்சநேய சாமியின் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதால், அவரின் உடல் சூடு குறைகிறது; தலைமுடி வறட்சி நீங்குகிறது; பொடுகு முற்றிலும் அகலுகிறது.

அரைத்த சிகைக்காய்க் கரைசல்கொண்டு அவர் மேனியைக் கழுவுவதால், அவர் மீது படிந்திருக்கும் அழுக்கு அகற்றப்பட்டு அவரின் தோல் மிருதுவாகிறது.

தயிர், சந்தனம் ஆகியவையும் நல்லெண்ணையைப் போலவே அனுமன் சாமியின் உடல் சூட்டைத் தணிக்கின்றன.

மஞ்சள் கிருமிநாசினி என்பது நாம் அறிந்ததே. நோய் தொற்றாமல் சாமியைப் பாதுகாக்கிறது.

புரதம், கால்சியம், வைட்டமின் பி(குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என்று பாலில் உள்ள எல்லாச் சத்துக்களும் சாமியின் வேர்வைத் துவாரங்கள் வழியாக அவரின் உடலில் கலக்கின்றன.

ஆக,

மேற்கண்ட அபிஷேகங்களால் அறிவியல் ரீதியாக, பகவான் ஆஞ்சநேயரின் உடல் நலம் பாதுக்கக்கப்படுகிறது என்பது நம்மை வியப்பிலும் பெரு மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறது.

ஆயினும், விசேட நாட்களில் மட்டும் அபிஷேகங்கள் செய்து, சாதாரணமான பல நாட்களில் அர்ச்சகர்கள் அவற்றைத் தவிர்ப்பது ஏன் என்று புரியவில்லை.

சிறப்பு அபிஷேகங்கள் இடம்பெறாத நாட்களில் சாமியின் உடம்பு சூடாகி, அழுக்குச் சேர்ந்து, மிருதுத் தன்மை குறைந்து, வறண்டுபோக நேரிடும் என்பதால், நாள் தவறாமல் அர்ச்சகர்கள் அவருக்கு அபிஷேகங்கள் செய்வது மிகவும் அவசியம் ஆகும்.

இனியேனும் செய்வார்கள் என்பது நம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.

செய்யத் தவறினால், ஆண்டவர் ஆஞ்சநேயருக்கு அவர்கள் அநீதி இழைத்தவர்கள் ஆவார்கள்!