புதன், 25 செப்டம்பர், 2024

மரண வலியும் மன வலிமையும் அம்மையார் நிர்மலாவின் ஆன்மிக நெறியும்!!!

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டை ஆளுவோரின் கடமை மக்களின் உயிர் காப்பதும் நலம் காப்பதும்தான். மறந்தும் ஆன்மிகத்திற்கு முன்னுரிமை கொடுப்பார்களாயின், அது பேரழிவின் அறிகுறியாகும்.


ஒரு நிறுவனத்தின் பெண் ஊழியர் அளவு கடந்த பணிச் சுமையால், கட்டுக்கடங்காத மன அழுத்தத்திற்கு உள்ளாகி உயிரிழக்கிறார்[ஆதாரம் கீழே*].


அவரின் விலைமதிப்பற்ற உயிர் பறிபோகக் காரணம் நிறுவனத்தின் நிர்வாகிகள் மட்டுமல்ல, இது போன்ற நிறுவனங்களின்[நடுவணரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை] செயல்பாடுகளைக் கண்காணித்து அவர்களைத் தண்டிக்கத் தவறிய நடுவண் ஆட்சியாளர்களும்தான்.


இந்த நாட்டின்[ஒன்றியம்] ஆட்சியாளர் குழுவில் ஒருவர் நிர்மலா சீத்தாராமன்.
மேற்கண்ட பெண்ணின் மரணத்திற்குக் காரணமான நிறுவனத்தினரைக் கடுமையாகக் கண்டிக்கத் தவறியதோடு, அந்தப் பெண்ணுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்திருந்தால், பணிச் சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தைத் தாங்கும் வலிமையைப் பெற்றிருப்பார்[உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது] என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

மன வலிமை என்பது முறையான மனப் பயிற்சியால் பெறத்தக்கது. கடவுள், ஆன்மா எல்லாம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவற்றின் மூலம் மன வலிமை பெறுவது சாத்தியமே இல்லை[காலங்காலமாகத் தொடர் பரப்புரையின் மூலம் இந்தவொரு மூடநம்பிக்கையை மக்கள் மனங்களில் வெகு ஆழமாகப் பதித்துவிட்டார்கள் பாவிகள்].


குற்றம் புரிபவர்களைத் தேடிப் பிடித்து உரிய தண்டனை வழங்காமல், அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பகுத்தறிவைக் கருவறுக்கும் வகையில் அறிவுரை வழங்குவது அடாத செயலாகும்.


அம்மா நிர்மலா மட்டுமல்ல, இவரணைய நாட்டை ஆளும் கும்பலும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு, அறிவியல்பூர்வமாகத் தீர்வு காண்பதைத் தவிர்த்து, ஆன்மிகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.


துன்பங்களைத் தாங்குவதற்கான மன வலிமையைப் பெற ஆன்மிகம் பயன்படும் என்ற நிர்மலாவின் ஆலோசனை அபத்தமானதாகும்.


ஒரு கயவன் பெண்ணொருத்தியை வன்புணர்வு செய்ததால் கடும் வேதனைக்குள்ளான அவள் தற்கொலை செய்துகொள்வதாக ஓர் நிகழ்வு[அவ்வப்போது நடைபெறுகிற ஒன்றுதான்].


இந்தக் கொடூர நிகழ்வை முன்னிறுத்தி நிர்மலா அம்மையாரிடம் நாம் கேட்கும் கேள்வி.....


சூழ்நிலை காரணமாகவோ, உயரிய சிந்தனையின் மூலமாகவோ அதீத மன வலிமையைப் பெறாத நிலையில், வன்புணர்வுக்கு ஆளான ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றால், உங்கள் ஆன்மிகம் அதைத் தடுத்து நிறுத்துமா?


அமைச்சர் என்னும் ஒரே ஒரு தகுதியை மட்டும் உரித்தாக்கி, நிர்மலாவோ பிற அமைச்சர்களோ எளிதில் தீர்க்க இயலாத பிரச்சினைகளுக்கு ஆன்மிகமே தீர்வு என்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல!

* * * * *

*#எர்னஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 26 வயது அண்ணா செபஸ்டியன் பணிச்சுமையால் உண்டான மன அழுத்தம் காரணமாகக் கடந்த வாரம் உயிரிழந்தார்[https://tamil.goodreturns.in]


இந்நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,


அன்னாவின் மரணம் தொடர்பாகக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார், “சிஏ படித்து முடித்த ஒரு இளம் பெண் பணிச்சுமை காரணமாக[உண்டான மன அழுத்தத்தால்] இறந்து விட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது” என்று குறிப்பிட்ட அவர்.....


பொத்தாம்பொதுவாக, “நீங்கள் என்ன படித்தாலும், எந்த வேலையைச் செய்தாலும் அவற்றால் உண்டாகும் அழுத்தத்தைத் தாங்கும் மனவலிமை இருக்க வேண்டும்[அழுத்தம் ஏற்படக் காரணமானவனைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?] அந்த வலிமை ஆன்மீகத்தால் மட்டுமே சாத்தியம்" என்று கூறினார்#

* * * * *

https://tamil.goodreturns.in/news/divinity-is-the-only-way-to-gain-inner-strength-to-handle-pressure-says-nirmala-sitharaman-on-ca-dea-051499.html


செவ்வாய், 24 செப்டம்பர், 2024

நானும் பேடிதான்!!![உண்மைக் கதை; 100% எதார்த்தம்]

து நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்..........


‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது கொடுமை. கொடுமையிலும் கொடுமை.


அவள் கடத்தப்பட்ட சில வினாடிகளில் ஒரு மாயாஜாலம் போல நூறுபேர் கூடிவிட்டார்கள். வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும் கதை பேசவும்தான்!


“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்க மாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” -யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுகன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” -எதார்த்தமாகச் சொன்னார் ஓர் உள்ளூர் ஆசாமி.


“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங் கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” -சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.


”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”


“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”


“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.


இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர். “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!


“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.


அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.


கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.


நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.


‘சே, என்ன மனிதர்கள்!’


ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூறு ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!


ஆண்களா இவர்கள்?


ஆண்மை உள்ளவர்களே ஆண்கள். பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, உரிய தருணங்களில் அவளின் ‘மானம்’ காப்பதுதான் உண்மையான ஆண்மை.


நம் ஊர்களில் பேடிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதா? ஆண்மையுள்ள ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டதா?


லட்சத்திற்குப் பத்துபேர் தேறுவார்களா?


கோபிக்காதீர்கள்..... அந்தப் பத்தில் நீங்களும் ஒருவரா?


யோசிக்கிறீர்கள்?


ஏதோ கேட்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.


இந்த அசம்பாவிதம் எப்போது நடந்தது என்று கேட்க நினைக்கிறீர்களா?


“ஆறு மாசம் இருக்கலாம்." -நான்.


“எங்கே?” -நீங்கள்.


“சேலத்தில்.” -நான்.


“உனக்கு எப்படித் தெரியும்? செய்தித்தாள்ல படிச்சியா?”


“இல்லீங்க. நானே நேரில் பார்த்தேன்.” -நானாகிய ‘பசி’பரமசிவம்


“அட!... வேடிக்கை பார்த்த நூறு பேரில் நீயும் ஒருத்தன்! இல்லையா?”


“அது வந்து.....”


“என்னய்யா வந்து போயி, மத்தவங்களோடு நீயும் வேடிக்கைதான் பார்த்திருக்கே; அந்தப் பொண்ணைக் காப்பாத்த நினைக்கலே. அப்போ, நீயும் ஒரு பேடிதான். அதாவது, ஆண்மையில்லாதவன். சரிதானே?”


“அது வந்து..... அது வந்து..... வந்து.....”

* * * * *

***பதிவு ரொம்பப் பழசு[2016]