சனி, 23 நவம்பர், 2024

சிறுநீர் பெய்து மலம் கழித்து.....

மனிதன் பல்லாயிரம் கோடி உயிரினங்களில் ஒருவன்.

உணவுண்டு நீர் அருந்திப் பின்னர் அவற்றை மலமாகவும் சிறுநீராகவும் வெளியேற்றுதல் அவனின் மிக முக்கியச் செயல்பாடுகளில் ஒன்று.

மூடனோ, அறிஞனோ, மேதையோ, இவர்களில் மேற்கண்ட செயலைச் செய்பவர்கள் அனைவரும் மனிதர்களே.

தெய்வம் என்று ஒன்று இருப்பதாகச் சொன்னார்கள்; சொல்கிறார்கள்.

தெய்வம் ஒன்றோ பலவோ, இப்போதைக்கு அது ஒன்றே என்று கொள்வோம்.

அது எப்படியிருக்கும், எப்படி இயங்கும் என்பது பற்றியெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாத நிலையில், அந்த ஒரு தெய்வத்திற்கும் பசி எடுக்கும்; அது உணவு உண்ணும்; நீர் அருந்தும் என்று சொன்னால் அதை ஏற்போமா?

மாட்டோம். சொல்பவனை அயோக்கியன் என்றோ, அறிவிலி என்றோ வேறு அடுக்கடுக்கான இழி சொற்களாலோ சாடுவோம் என்பதில் மாறுபட்டக் கருத்துக்கு இடமில்லை.

இந்நாள்வரை இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த கோடி கோடி கோடானுகோடிப் பேரும் உண்டு கழித்து வாழ்ந்தவர்களே; விதிவிலக்கானவர் என்று எவரும் இல்லை.

ஆக, மனிதர் எவரும் தெய்வம்[இருந்தால்] ஆக இயலாது; இயலவே இயலாது என்பது நூறு விழுக்காடு உறுதி.

இது தெரிந்திருந்தும்.....

திருவண்ணாமலை ரமண மகரிஷி, சீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்களைக் கடவுள் அவதாரம் என்று போற்றி வழிபட்டது... வழிபடுகிறது எண்ணிலடங்காத பக்தர் கூட்டம்.

எண்ணிலடங்காத இந்த மூடர் கூட்டத்திடம் நாம் முன்வைக்கும் கேள்வி.....

உயிர் வாழ்ந்தவரை இந்த அவதாரங்கள் உணவுண்டு மலம் கழித்ததில்லையா? நீர் அருந்திச் சிறுநீர் பெய்ததில்லையா? 

“மலம் கழித்தார்கள். ஆனால் நம்மவருடையதைப் போல அதில் கெட்ட வாசனை இருக்காது; சந்தனம் போல் கமகமக்கும். அவர்களின் சிறுநீர் சுவைநீர் போல இனிக்கும்” என்கிறார்களா அவதாரங்களின் விசுவாசிகள்?

“ஆம்” என்பது அவர்களின் பதிலாயின், அவர்களின் இந்த முட்டாள்தனத்தைப் பயன்படுத்தித்தான், ஜக்கி வாசுதேவன், நித்தியானந்தன்,  பாபா ராம்தேவன், குர்மித் ராம் ரஹீம், நிர்மல் பாபா, ஓம் சுவாமி, சுவாமி அஸீமானந்தா, ராதே மா போன்றவர்கள் தங்களைக் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு கோடிகளில் புரண்டு சொகுசாக வாழ்ந்தார்கள்; வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வாழ்க அவதாரங்கள்! வளர்க பக்தி!!

                                               *   *   *   *   *

அவதாரம் குறித்த ஒரு கட்டுக்கதை:

இந்துப் புராணங்களின்படி, இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால், நல்லவர்கள் மற்றும் பக்தியுள்ளவர்கள் துன்பப்படும்போது கடவுள் மனிதனாகப் உருவெடுத்துப் பூமிக்கு இறங்குகிறார். அவதார் என்ற சொல்லுக்கு இறங்குதல்(பூமிக்கு) என்று பொருள். கடவுள் காலத்தின் தேவையின் அடிப்படையில் பூமியில் இறங்குகிறார், நல்லவற்றைப் பாதுகாக்கிறார், தீமையை அழித்துத் தர்மத்தை(நீதியை) மீட்டெடுக்கிறார். அவதாரங்கள் பற்றிய கருத்து இதிஹாஸ் மற்றும் புராணங்களின்(வேத புராணங்கள்) பிற்கால, வரலாற்றுk காலங்களில் மட்டுமே நடைமுறைக்கு வந்தது. அது வேதங்களில் காணப்படவில்லை[https://hinduismwayoflife.com/hinduism-avatar-saints-3/]

* * * * *

  புட்டபர்த்தி சாயிபாபா பற்றிய புருடாக்களில் ஒன்று:

     [பக்தர்கள் கொட்டிக்கொடுத்த பணத்தை நல்ல வழிகளிலும் செலவழித்தார் என்பது பாராட்டுக்குரியது]

                                

வெள்ளி, 22 நவம்பர், 2024

ஒரு தட்டாம்பூச்சி[தும்பி]யின் மரணமும் புரியாத படைப்புத் தத்துவமும்!!!

மொட்டைமாடியில் சப்பணமிட்டு அமர்ந்து மூச்சுப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியபோது அந்தத் தட்டாம்பூச்சி கண்ணில் பட்டது.

முன்னும் பின்னும் பக்கவாட்டிலுமாகப் பறந்துகொண்டிருந்த அது, ஒரு கட்டத்தில் சுழன்று சுழன்று கீழ் நோக்கிச் சரிந்து தரையில் விழுந்தது.

ஒரே இடத்தில் சிறிதும் அசைவின்றிக் கிடந்ததால் கை விரலால் அதைத் தொட்டுப்பார்த்தேன்.

சலனம் சிறிதுமில்லை; இறந்துபோயிருந்தது.

‘விகாரம்’ ஏதுமின்றி முன்பிருந்த தோற்றத்துடனேயே அது இருந்தது. மரணிப்பதற்குத் தேவைப்பட்ட நேரம் மிகவும் சொற்பம். எனவே, மரண வேதனைக்கு உள்ளாகித் துடி துடித்துச் சாகும் அவலமும் அதற்கு நேர்ந்திருக்க வாய்ப்பில்லை.


மனிதர்களின் நிலை இதற்கு நேர்மாறானது.

வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிக மிக அதிகம். இவரா அவர் என்று கேட்டுப் பிரமிக்கும் அளவுக்கு அது நிகழ்ந்துள்ளது.

மேலும்.....

தட்டானுக்கு வாய்த்தது போல வலியில்லாத[சில வினாடி நேரம் மிகச் சிறிய அளவில் இருந்திருக்கலாம்] மரணமும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை; மரணிப்பதற்கு முன்பும்[வாழும் காலம்] அதைத் தழுவும் நேரத்திலும் அனுபவிக்கும் வலியின் அளவு விவரிக்க இயலாதது. வயது ஆக ஆக அவர்களின் உருவம் அழகும் கவர்ச்சியும் இழந்து காணச் சகிக்காததாக மாறுகிறது.

மனிதர்களுக்கு ஆறறிவு வாய்த்து, அதனால் அவர்கள் இன்பங்களைக் காட்டிலும் அதிகத் துன்பங்கள் அனுபவிப்பதைக் கருத்தில் கொண்டால், மனித வாழ்வைவிடவும் தட்டாம்பூச்சி போன்ற பூச்சி&உயிரினங்களின்[வலியற்ற இயற்கை மரணமும், அதிக மாறுதல்களுக்கு உள்ளாகாத தோற்றமும் பறவை, விலங்கு, நீர்வாழ்வன போன்ற உயிரினங்களுக்கும் வாய்க்கிறது; இரைக்காகவோ பிற காரணங்களுக்காகவோ தம்மினும் வலியயனவற்றால் தாக்கப்படுபவை விதிவிலக்கு] வாழ்வே விரும்பத்தக்கது எனலாம்[வாழும் கால அளவு ஒரு பொருட்டல்ல. எத்தனை எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு].

இந்நிலையில்.....

உயிரினங்களைப் படைத்ததாகச் சொல்லப்படும் கடவுள் மனித இனத்துக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்தது, அந்த இனத்தைப் பெருமைப்படுத்தவா சிறுமைக்கு உள்ளாக்கவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது!