வியாழன், 27 பிப்ரவரி, 2025

பிரதமர் மோடியின் ஆட்சி... '-’!!! ‘+’???

*இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு முட்டாள்களின் எண்ணிக்கை மேதகு மோடியின் ஆட்சிக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. ‘கும்பமேளா’ கூத்தடிப்புக்கு இதில் முக்கியப் பங்குண்டு. 

*நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் அளவுக்கு, கற்பனையான புராணக் கதை மாந்தர்களுக்குக் கோடிகளில் செலவழித்துக் கோயில் கட்டுகிறார். பக்திப் பயணம் என்னும் பெயரில் வெட்டியாய் ஊர் சுற்றும் மூடர்களுக்கு வசதிகள் செய்துதரப் பெரும் தொகை செலவிடப்படுகிறது.

*பக்தி தொடர்பான தன்னுடைய நடவடிக்கைகளை இவரளவுக்கு எந்தவொரு பிரதமரும் விளம்பரம் செய்ததில்லை. சிந்திக்கும் அறிவை வளர்ப்பதற்கு எதிரான நடவடிக்கை இது.

*கடும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் சாமியார்களுக்கு அதிக அளவில் மரியாதை தருகிறார்; நிரந்தரப் பாதுகாப்பும் உண்டு.

*அயல்நாட்டு உறவுகளை மேம்படுத்தப் பயணம் தேவைதான் என்றாலும், அதையே காரணம் காட்டி உலகம் சுற்றுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார் நம் பிரதமர்.

*போதுமான ஆதாரங்கள் இல்லாமல் “அதைச் செய்தேன்; இதைச் சாதித்தேன்” என்று வெறும் வாயால் அடிக்கடி வடை சுடுகிறார்.

*குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் எதிர்க் கட்சிக்காரர்களுடன் விவாதித்து, அவை குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் போதுமான அக்கறை காட்டுவதில்லை.

*அடிக்கடி, சட்டங்களைத் திருத்தி மசோதாக்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள், கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் இவர் தொடர்ந்து ஈடுபடுகிறாரோ என்று எண்ணத் தூண்டுகிறது.

*பிரச்சினைகளைக் கையாளுவதற்கும், வளர்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கும் தேவையான அறிவாற்றலும் அனுபவமும் பெற்றவர்கள் இவரின் அமைச்சரவையில் இல்லை என்றே சொல்லலாம்.

*பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியைக் கருத்தில் கொண்டுதான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன; மாநிலங்களுக்கென்று அதிகாரங்களும் வழங்கப்பட்டன. அதை அலட்சியப்படுத்தி, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார் மோடி. மாநில அரசுகளால் இந்த அடாத செயல் சுட்டிக்காட்டப்படினும் தன்னைத் திருத்திக்கொள்ள அவர் தயாராக இல்லை.  

மேற்கண்டவை மோடி ஆட்சி குறித்த மதிப்பீட்டு[-]ப் பட்டியல்!

‘+’?..... தேடித் தேடித் தேடிக் கண்டறிக!!

புதன், 26 பிப்ரவரி, 2025

கும்பமேளா நீராடல்... புனிதம் சேர்த்த மோடியும் தவிர்த்த காஞ்சி மட விஜயேந்திரனும்!

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடந்துவரும் கும்பமேளாவில் கலந்துகொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தாராம்[செய்தி].

வந்து என்ன செய்தார்?

‘ஓர் அனாதை இல்லத்திற்கு நன்கொடை வழங்கினார்; சங்கர மடம் சார்பில் ஒரு முதியோர் இல்லம் தொடங்கி வைத்தார். ஏழை மக்களின் புகலிடமான அரசு மருத்துவமனைக்குச் சென்று தீராத நோய்களால் அவதிப்படுவோருக்கு ஆறுதல் சொன்னார்…’ என்றிப்படியான நல்ல காரியங்கள் ஏதும் செய்தாரா என்றால், இல்லை.

பின்னே என்ன செய்தார்?

ஊடகக்காரர்களுக்குப் பேட்டியளித்து அருள்பாலித்தார்.

பேட்டியில் என்ன சொன்னார்?

என்னென்னவோ சொன்னார். அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று: #அகில இந்திய அளவில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த புண்ணிய தீர்த்த அடையாளமாக உள்ள அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்தோம்# என்பதும் ஒன்று[இவர் பிரார்த்திக்கலேன்னா பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்காவோ?].

#காஞ்சி மடத்தின் மூலம் அங்கு மண்டபம் அமைத்து, கடந்த 40 நாட்களாக வேதபாடசாலைகள் மூலம் உலக நன்மைக்காக யாகங்கள், பூர்ணாஹூதி[!?] ஹோமங்கள், புனித பூஜைகள் மற்றும் அன்னதானங்கள் நடக்கிறது# இதுவும் அவர் சொன்னதே.

இப்படிச் சொன்ன அவரிடம்.....

“ஆண்டவனால் அனுப்பப்பட்ட மோடியும், இக உலகப் ‘போகம்’ துறந்த ‘யோகி’[ஆதித்யானந்த்]யும் குளியல் போட்டதால் கூடுதல் புனிதத்துவம் பெற்ற திரிவேணி சங்கமத்தில், ஈஸ்வரனின் அனுக்கிரஹம் பெற்ற தாங்களும் நீராடி அதில் அபிரிதமாகப் புனிதம் சேர்த்தீர்களா?” என்று ஊடகத்தார் கேட்டிருக்கலாம்.

கேட்டிருந்தால்…..

அவர் திருவாய் மலர்ந்தருளுவாரோ அல்லவோ, அவரின் சிஷ்யர்களில் எவரேனும் ஒருவர், “நீச மனிதர்கள் நீராடுகிறதும் பாவங்களின் கழிப்பிடமும் ஆன திரிவேணி சங்கமத்தில் அவர் நீராடமாட்டார்” என்று பதில் சொல்லியிருப்பார்.

ஏனோ எவரொருவரும் கேட்கவில்லை!

* * * * *

https://tamil.indianexpress.com/tamilnadu/kanchi-kamakoti-peetadhipathi-vijayendra-says-even-in-the-computer-age-devotion-is-deeply-rooted-among-people-8753022