வெள்ளி, 17 அக்டோபர், 2025

“அவன் மூடன்! நீ படுமூடன்!! உன் ரசிகர்களும் மூடர்களா ரஹ்மான்[ஏ.ஆர்]?!”

“..... சூஃபி பாதை என் அம்மாவையும் என்னையும் ஆன்மீக ரீதியாக உயர்த்தியது. அது எங்களுக்குச் சிறந்த பாதை என்று நாங்கள் உணர்ந்தோம். எனவே, நாங்கள் சூஃபி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம். எங்களைச் சுற்றியுள்ள யாரும் எங்களின்  மதமாற்றத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாங்கள் இசைக்கலைஞர்கள். அது எங்களுக்கு அதிகச் சமூகச் சுதந்திரத்தை அனுமதித்தது” என்று சொல்லியிருக்கிறார், திலீப்குமாராக இருந்து உலகப்புகழ் இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர். ரஹ்மான். 

இத்துடன் நிறுத்திக்கொண்டிருந்தால் அவரின் மதிப்புக்குப் பங்க விளைந்திருக்காது.

"என் தங்கையின் ஜாதகத்தைக் காட்ட[திருமணம் தொடர்பாக] அம்மாவும் நானும் ஒரு ஜோதிடரிடம் சென்றோம்,  அவர் 'அப்துல் ரஹ்மான்' மற்றும் 'அப்துல் ரஹீம்' என்ற பெயர்களைப் பரிந்துரைத்தார். 'ரஹ்மான்' என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆக, எனக்கு முஸ்லிம் பெயரை வைத்தது ஒரு இந்து ஜோதிடர்"[நல்ல வேளை கருப்பனார், முனியப்பனார், மண்ணாங்கட்டி, சுண்ணாம்புக்கட்டி என்பதான பெயரெல்லாம் சிபாரிசு பண்ணல] என்று உளறிக்கொட்டியிருக்கிறார்.

தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே,

ஜோதிடத்தின் பெயரால் மக்களை முட்டாள்களாக்கிப் பிழைப்பு நடத்துபவர்கள் ஜோதிடர்கள். அவர்களின் ஒருவன் புளுகி வைத்ததை நம்பியது உனக்குச் சிந்திக்கும் அறிவு இல்லை என்பதன் அடையாளம்.

ஜோதிடர்கள் முட்டாள்கள் என்பது பற்றியோ, அவனை நம்பிய நீ படுமுட்டாள் என்பதைப் பற்றியோ எங்களுக்குக் கவலையில்லை. இந்த உண்மையைப் பலர் அறிய வெளியே சொல்லி, ஆகச் சிறந்த இசையமைப்பாளன் என்ற வகையில் உன் ரசிகர்களாக உள்ள ஆயிரக்கணக்கானவர்களையும் மூட்டாள்களாக ஆக்குகிறாயே அதுதான் எங்களைப் பெரிதும் கவலைப்படச் செய்கிறது.

புகழ்ப் போதையில் இந்தவொரு தவற்றைச் செய்திருக்கிறாய். இருப்பினும், உன் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவிப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாக அமையும்.

வருந்துவதாக அறிவிப்புச் செய்வாயா தம்பி ரஹ்மான்?

* * * * *

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.msn.com/en-in/news/India/ar-rahman-says-his-muslim-name-was-suggested-by-hindu-astrologer-never-liked-my-name-dileep-kumar-no-one-forced-me-to-embrace-sufi-islam/ar-AA1ODM7B?ocid=winp2fptaskbar&cvid=feba6ca26a424482d2275def31e43e85&ei=18

=Story by Entertainment Desk
 • 7h • 
2 min read

வியாழன், 16 அக்டோபர், 2025

‘அது’க்கு அது ஆகாத சாதி! ‘இது’க்குமா?(புதிர்&புரட்சிப் படைப்பு)

 கைப்பேசியின் அழைப்பு.

“அலோ...” சொன்னார்  அறிவழகன்.

“தலைவரே, நான் குமார் பேசுறேன். நம்ம ஜாதிப் பொண்ணு  அமுதா ‘அந்த’ ஜாதிப் பயலோட மலைக் கோயிலுக்குப்  போற பஸ்ஸில் ஒன்னா உட்கார்ந்திருக்கா. ரெண்டு பேரும் நெருங்கிப் பழகுற விசயத்தை உங்ககிட்டே சொல்லியிருக்கேன். கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களோன்னு சந்தேகமா இருக்கு” என்றான் குமார்.

“இது சம்பந்தமா அமுதாவோட அப்பன் காளியப்பன்கூட ஃபோனில் பேசியிருக்கேன். நீ உடனே புறப்பட்டு வா. நம்ம ஆட்களோட அவரையும் கூட்டிட்டுக் கோயிலுக்குப் போவோம். அவனைக் கடத்திட்டுப் போய் விசாரிப்போம்.” -கொதிக்கும்  நெருப்பு வார்த்தைகளை உதிர்த்தார் அறிவழகன்.

காளியப்பனை, அவர் வீட்டில் சந்தித்துக் கலந்தாலோசித்த பின்னர் அவர்கள் புறப்பட ஆயத்தமானபோது,  அமுதாவே அங்கு வந்து சேர்ந்தாள்.

எதிர்பாராத அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்ட அறிவழகன், அமுதாவை விசாரிக்கும்படி காளியப்பனுக்கு ஜாடை காட்டினார்.

“ஏதோ சர்டிஃபிகேட் வாங்கக் காலேஜ் போறதா சொல்லிட்டுப் போனே. வாங்கிட்டியா?” என்றார் காளியப்பன்.

“வாங்கிட்டேன். முதல் வகுப்பில் பாஸ் பண்ணியிருக்கேன்.”

“அப்புறம், வேற எங்க போனே?”

“மலைக் கோயிலுக்குப் போனேன். அப்பா, நான் என் கிளாஸ்மேட் கலைச்செல்வனைப் பத்தி உங்ககிட்டே சொல்லியிருக்கேன். ரொம்ப நல்லவன்; புத்திசாலி. நான் எம்.எஸ்ஸி., முதல் வகுப்பில் தேறியிருக்கேன்னா அதுக்கு அவன்தான் காரணம். அவனை நான் மலைக் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போயி மாதொருபாகன் முன்னிலையில் அவனுக்கு ராக்கி கட்டினேன். தாழ்த்தப்பட்ட ஜாதிப் பையனைக் காதலிக்கிறதுதான் தப்புன்னா சகோதரனா ஏத்துக்கிறதுகூடத் தப்பாப்பா?” -சொல்லி முடித்தபோது அவளின் பார்வை அறிவழகனின் முகத்தில் பதிந்திருந்தது. 

அவர் பார்வையோ தரையில் தாழ்ந்து கிடந்தது!

                                     *   *   *   *   *

***“இது புதிய சிந்தனையில் உருவான புரட்சிப் படைப்பு. கதாசிரியர் யார்?” என்கிறீர்களா?

அது வந்து... ஹி... ஹி... ஹி!!!