திங்கள், 29 டிசம்பர், 2025

வாயால் வடை சுட்டுச் சுட்டுச் சுட்டுத் தமிழ் வளர்க்கிறாரா தந்திரசாலி மோடி?!

 

அகிலம் புகழ் மோடி அவர்களே,

“உலகிலேயே பழமையான மொழி தமிழ்” என்று இதுவரை எத்தனை முறை சொல்லியிருப்பீர்?

எத்தனை முறையாகவோ இருக்கட்டும், உம்முடைய இந்தப் போலித்தனமான புகழ் உரையால் தமிழ் பெற்ற பயன் என்ன? 

உள்மனதைத் தொட்டுச் சொல்லும், செத்த மொழி சமஸ்கிருதத்திற்கும், உமக்குப் பதவிப் பிச்சை அளிக்கும் இந்திக்கும் செலவழிக்கும் தொகையில் நூற்றில் ஒரு பங்கேனும் தமிழுக்கு ஒதுக்குகிறீரா?[இரண்டுக்கும் செலவிடும் தொகை கணக்குக் காட்டுவதைவிடவும் மிக அதிகம்].

மனசாட்சி என்று ஒன்று இருந்தால் ஒளிவுமறைவில்லாமல் சொல்லும், காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சியில் சின்னஞ்சிறு குழந்தைகள் சரளமாகத் தமிழில் பாடுவதாக[நீர் பாடவைக்கிறீரோ என்னவோ]ச் சொல்கிறீர். ஒரு பத்துப் பிள்ளைகள் பாடுவதால்/பாட வைப்பதால் தமிழ் வளர்ந்துவிடுமா?

உம்முடைய இந்த நிகழ்ச்சிக்கு ‘மன்கீபாத்’ என்று நாமகரணம் சூட்டியிருக்கிறீர். மற்ற மொழிகளைவிடவும் கொஞ்சம் அதிகம் பேசப்படுகிற இந்தியில் பெயர் சூட்டுகிற நீர், பிறிதொரு மொழியில் பெயர் சூட்டியிருந்தால், உம்முடைய பேச்சு மக்களைச் சென்றடையாதா?

தேர்தல் வரும் நேரங்களில் தமிழைப் புகழ்வதாக எண்ணி எதையேனும் உளறிக்கொட்டினால் தமிழர்களின் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று கனவு காண்கிறீர்.

அந்தக் கனவு ஒருபோதும் நிறைவேறாது. உம்முடைய கட்சிக்கு[பாஜக]த் தமிழ் மக்கள் போடுகிற கொஞ்சம் வாக்குகளையும் உம்முடைய போலித்தனமான புகழ்ச்சி வெகுவாகக் குறைக்கும் என்பதை அறிவீராக!

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

‘மக்களவையில் மொழியாக்கம்[22 மொழிகள்]’... இது பிள்ளையார் சுழி மட்டுமே!

 ஒன்றிய அரசின் மேற்கண்ட இந்த நடவடிக்கை மெச்சத்தக்கது என்றாலும், வெறித்தனமான இந்தித் திணிப்பால் இந்த நாடு உடைந்து நொறுங்கிச் சிதறாமலிருக்க, இன்னும் மேம்பட்ட விரைவான நடவடிக்கைகள் தேவை.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை.....

அஞ்சலகம், ரயிவ்வே, நடுவணரசின் வங்கிகள், காப்பீடு போன்றவற்றில் ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை ஆக்கிரமித்திருக்கிற அத்தனை இந்தி வாசகங்களும் அழிக்கப்பட்டு, அங்கெல்லாம் அந்தந்த மாநில மொழி வாசகங்கள் இடம்பெறுதல் வேண்டும்[இந்தி பேசப்படும் மாநிலங்களில் ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெறலாம்].

இது நிகழ்ந்தால்தான், இந்தியா இந்தி வெறியன்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல; வேறு வேறான பல மொழிகள் பேசுகிற மாநில மக்களுக்கும் உரிமையானது என்பது உறுதிப்படுத்தப்படும்.

இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் வட்டாரங்களின் ஒரு தனித்துவமான கலவையாகும். இவை அனைத்தும் ஒரே அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன[‘The Indian Union is a unique amalgamation of diverse cultures, languages, and regions, all unified under a single constitutional framework’] என்பதை  ஒட்டுமொத்த உலகமும் அறிந்துகொள்ளும்.