கீழ்வரும் கதையையும் முழுமையாகப் படியுங்கள். கதையின் ‘முடிவு’ மிக முக்கியம்.
ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்த 'மதகுரு' ஒருவர், “........ஆக, கடவுள் இருப்பதை யாரும் யாருக்கும் காட்ட முடியாது; பிறரிடம் கேட்டு அறியவும் இயலாது; ஐம்புலங்களால் அறிய முடியாது. அவை மகான்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே சாத்தியம். சாமானியர்களான நீங்களும் மனப்பூர்வமாக முயன்றால் அவரை உணர்வது இயலும். அனைவரும் இறைவனை உணர்க; உய்தி பெறுக” என்று பேருரையை முடித்து மேடையிலிருந்து இறங்கி நடந்தார்.
அவரை வழி மறிப்பதுபோல் நின்றுகொண்டிருந்த ஒருவன், சிரம் தாழ்த்தி, கை குவித்து அவரை வணங்கினான்.
“ஏதும் சந்தேகமா?” என்றார் மதகுரு.
“உணர்தல்னா என்ன? எனக்குப் புரியும்படி சொல்லுங்க” என்றான் அவன்.
அவனைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்த மதகுரு, ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார்.
கோபப்பட்ட அவன், கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க, “என்னை ஏன் அறைந்தீர்கள்?” என்றான்.
அவன் கேள்வியை அலட்சியப் படுத்திய அவர், “நான் அறைந்தவுடன் உனக்கு வலிப்பதை உணர்ந்தாய். அந்த உணர்ச்சியை மற்றவர்களுக்குக் காட்டவோ, விளங்கச் சொல்லிப் புரியச் செய்யவோ இயலாது. அது உனக்கு மட்டுமேயான ஓர் அனுபவம். புரிந்ததா?” என்றார்.
‘புரிந்தது’ என்பதாகத் தலையசைத்தான் அவன்.
“அன்பு, பாசம், கவலை, பொறாமைன்னு பல குணங்கள் நமக்குள் இருக்கு. இவை நம் நாடி நரம்புகளுக்குள் ஊடுருவியுள்ளன. இவற்றை அது அதற்கான செயல்பாட்டின் மூலமே வெளிப்படுத்த இயலும். காட்சிப்படுத்தவோ அறியச் செய்யவோ புரிய வைக்கவோ இயலாது.”
“புரிஞ்சுதுங்க.”
“அன்பையும் பாசத்தையும் மத்ததுகளையும் உணர்ற மாதிரி, முயன்றால் கடவுளையும் உணரலாம். அது உன்னால் முடியும்” என்றார் மதகுரு.
“முடியாதுங்க” என்றான் அவன்.
குரலில் ஏமாற்றம் தொனிக்க, “ஏன்?” என்றார் மதகுரு.
“நம் உடம்பின் நரம்புகளில் ஊடுருவியுள்ள கோபம், காமம், அன்பு, பாசம், இரக்கம் போன்றவற்றை அவற்றிற்கு ஏற்புடைய நிகழ்வுகளின் மூலம்தான் நாம் உணர இயலும் என்றீர்கள்.....
ஒரு பிச்சைக்காரனைக் காணும்போது இரக்க உணர்ச்சிக்கு ஆட்படுகிறோம். பெற்றெடுத்த குழந்தை நோயால் அவதிப்படுவதைப் பார்க்கும்போதுதான் ஒரு தாயின் பாச உணர்ச்சி வெளிப்படுகிறது. காமம் போன்ற மற்ற உணர்ச்சிகளை உணர்வதற்கும் ஏற்புடைய நிகழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆக, உணர்தலுக்கு உணரத் தூண்டும் நிகழ்வுகள் தேவை என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.....
வலியை உணர என்னை அடித்தீர்கள். அதைப் போல என்னைத் தொட்டுத் தடவுவது, கட்டித் தழுவுவது, சொறிவது, சுரண்டுவது என்று ஏதாவது ஒரு செயலைச் செய்து கடவுளை உணரச் செய்யுங்கள் குருதேவரே?” -பணிவுடன் கேட்டான் அவன்.
சற்று நேரம் அவனை முறைத்துப் பார்த்த மதகுரு, “நீ விதண்டவாதம் பேசுகிறவன். கடவுள் உன்னைத் தண்டிப்பார்” என்று சபித்துவிட்டு நகர்ந்தார்.