வெள்ளி, 1 ஜூன், 2018

தங்கப்பேழையில் தமிழரின் படைப்புகள்???

உலகம் போற்றும் மாவீரன் அலெக்சாண்டரின் வாழ்வில் இடம்பெற்ற கீழ்க்காணும் நிகழ்வை, எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருப்பினும்,  நினைவுகூர்வதில் தவறேதும் இல்லை.

ஒட்டுமொத்த உலகையும் வெல்லும் ஆசையில் படை நடத்திச் சென்ற அலெக்சாண்டர், எதிர்ப்பட்ட நாடுகளையெல்லாம் வென்றான். அவனுடனான சமருக்கு அஞ்சிச் சமரசம் செய்துகொண்ட மன்னர்கள் பலர். அவர்களுள் பாரசீக மன்னனும் ஒருவன். அவன், அழகிய வேலைப்பாடுகள் அமைந்த தங்கப்பேழை ஒன்றினை அலெக்சாண்டருக்குப் பரிசளித்தான்.

ஈடுஇணையற்ற அந்த அற்புதப் பேழையைத் தன் வீரர்களிடம் காட்டி மகிழ்ந்த அலெக்சாண்டர், ''இதைவிட உயர்ந்த பொருளைத்தான் இந்தப் பேழையில் வைத்திட வேண்டும். தரத்தில் குறைந்த எதனையும் இதில் வைப்பது இதனை அவமதிப்பதாகும். இதனுள் வைக்கத்தக்க அரிய அந்தப் பொருள் எது? சொல்லுங்கள்'' என்று கேட்டான்.

எவரொருவரும் சரியான பதில் தரவில்லை. அலெக்சாண்டரே சொன்னான்.....

''இதனுள் வைப்பதற்கான தகுதி பெற்ற ஒரே பொருள் 'ஹோமரின் இலியட்' காவியம்தான்.'' 

அலெக்சாண்டர் மாவீரன் மட்டுமல்ல, விலைமதிப்பற்ற படைப்புகளை [நூல்கள்] மதிக்கத் தெரிந்தவன் என்பதையும் இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

நம்மிடமும் தொல்காப்பியம், சங்கப்பாடல்கள், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற விலைமதிப்பற்ற படைப்புகள் உள்ளன. தங்கப்பேழைகளில் வைத்து இவற்றைப் போற்றாவிடினும், நம் மனப் பேழைகளில் வைத்தேனும் போற்றிட வேண்டும்.
 
போற்றுகிறோமா?



வியாழன், 31 மே, 2018

ஜோதிடலோகம்![பொழுதுபோக்குக் கதை]

சொர்க்கத்தை மேற்பார்வையிட்டுத் திரும்பிய இறைவி, இறைவன் வெற்று வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு, “பிரச்சினை எதுவானாலும் தியானம் பண்ணினா தீர்வு கிடைக்கும்னு சொல்லியிருக்கேன். ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கீங்கன்னு உங்க முகமே சொல்லுது. மோனத்தவத்தில் மூழ்காம பிது பிதுன்னு முழிச்சிட்டிருக்கிங்களே, ஏன்?'' என்று கேட்டார்.

“அதுக்குத்தான் உட்கார்ந்தேன். மனசை ஒருமுகப்படுத்த முடியல” என்றார் இறைவன், வருத்தம் தோய்ந்த குரலில்.

“ஏனாம்?”

“பகுத்தறிவாளன்கிற பேர்ல, கண்ட கண்ட கசமாலங்கள் எல்லாம் 'கடவுள் எப்போ பிறந்தார்? எப்போ மறைவார்? எப்பவும் இருந்துகொண்டே இருப்பார்னா அது எப்படிச் சாத்தியம்?'னு அடுக்கடுக்கான கேள்விகளால கிடுக்கிப்பிடி போட்டுட்டே இருக்கானுக. நம்ம அவதாரம்னு சொல்லிட்டுத் திரியற ஆட்களால அவங்களைச் சமாளிக்க முடியல. யோசிச்சிப் பார்த்தா எனக்குமே பதில் தெரியல. இனி என்ன செய்யறதுன்னும் புரியல.”

“கவலையை விடுங்க. பூலோகத்திலிருந்து ஒரு ஜோதிடரை வரவழைச்சி, 'கோடிகோடி கோடானுகோடி பிரபஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால, இன்ன நட்சத்திரத்தில் கடவுள் தோன்றினார்; யுகயுகயுகாதி ஆண்டுகளுக்கு அப்புறம், இன்ன நட்சத்திரத்தில் மறைவார்; மறுபடியும் தோன்றுவார்...மறைவார்...தோன்றுவார்..மறைவார்..... இப்படியாகத்தானே, இடைவெளி விட்டுத் தோன்றுவதும் மறைவதுமாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்' அப்படீன்னு பூலோகத்திலுள்ள எல்லா ஊடகங்களுக்கும் அறிக்கை தரச் சொல்லிடறேன். யோசிச்சி யோசிச்சி மண்டை காய்ந்து நாத்திகர்கள் 'மெண்டல்' ஆயிடுவாங்க. அப்புறம் எவனும் கேள்வி கேட்க மாட்டான்” என்றார் இறைவி.

“ஜோதிடர்கள் விடுற அறிக்கையை மக்கள் நம்புவார்களா?” -இது இறைவனின் சந்தேகம்.

“என்ன நீங்க, உலகம் புரியாத கடவுளா இருக்கீங்க. பூலோகமே இந்த ஜோதிடர்கள் பின்னாலதான் போயிட்டிருக்கு” என்றார் இறைவி.

இறைவனின் வதனத்தில் பேரானந்தம் பரவியது!

---------------------------------------------------------------------------------------------------------------