சனி, 21 செப்டம்பர், 2019

'ஆண் புத்தி அரைப்புத்தி’...[பொழுதுபோக்கு]

“பக்கத்துத் தெரு சேதுவோட பெண்டாட்டி தாமரை வந்திருந்தா. ரொம்ப நேரம் காத்திருந்துட்டுப் போய்ட்டா”என்றாள் சவீதா.

கம்பெனி வேலையாக, வெளியூர் போய்விட்டுக் காலையில்தான் ஊர் திரும்பியிருந்தான் புவியரசு.

“அவள் எதுக்கு என்னைப் பார்க்கணும்? கேட்டியா?” என்றான்.

“கேட்டேன். நாலு நாள் முந்தி, தண்ணியடிச்சிட்டுத் தெருவோரம் விழுந்து கிடந்த அவ புருஷனை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தீங்களாம். அதுக்கு நன்றி சொல்லிட்டுப் போக வந்தா.”

“சொல்லிட்டாதானே, அப்புறம் என்ன?”

“உங்களை நேரில் பார்த்துச் சொல்லணுமாம். நாளை வர்றதா சொல்லிட்டுப் போனா.”

பாவம் தாமரை. இளம் பருவத்திற்கேற்ற செழுமையான உடல்வாகும் அழகும் உள்ளவள்; மொடாக் குடியன் என்பது தெரியாமல் சேதுவுக்குக் கழுத்தை நீட்டிவிட்டுத் துன்பத்தில் உழல்பவள். அவளை நினைத்துப் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறான் புவியரசு.

சொன்னபடியே, மறுநாள் மாலையில் புவியரசுவின் வீடு தேடி வந்தாள் தாமரை.

வந்ததும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, “அம்மா இல்லீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

“சவீதா கோயிலுக்குப் போயிருக்கிறா. அவகிட்டே சொன்னாப் போதாதா? என்கிட்டே தனியா வேறு நன்றி சொல்லணுமா?” என்றான் புவியரசு.

“நான் நன்றி சொல்ல மட்டும் வரல. உங்ககிட்ட தனியா ஒரு விஷயம் பேசணுன்னு வந்தேன்.”

கண்களில் வியப்பு பரவ, “தனியாவா?” என்றான்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். என் புருஷனுக்கு உதவுற சாக்கில் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்கிறீங்களாம்” -சொல்லிவிட்டுத் தலை தாழ்ந்த நிலையில் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் தாமரை.

“யார் அப்படிச் சொன்னது?” -கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டான் புவியரசு.

“அவர்தான் சொல்றாரு.”

“அவன் கிடக்கிறான் குடிகாரப்பய. அர்த்தமில்லாம ஏதாவது உளறுவான். நீ போ. அவனை நான் பார்த்துக்கிறேன்” என்றான் புவியரசு.

முகத்தில் லேசான வருத்தம் பரவ, தொங்கிய முகத்துடன் அங்கிருந்து அகன்றாள் தாமரை.

அதற்கப்புறம் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு நேரவில்லை. புருசனைப் பிரிந்து அவள் தாய்வீடு சென்றுவிட்டதாகச் சற்று முன்னர் கோயிலுக்குப் போகும்போது சவீதா சொன்னது நினைவுக்கு வந்தது. கூடவே, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்குறீங்களாம்” என்று தாமரை சொன்னதும் மனதில் உறைத்தது. இதைச் சவீதா இருக்கும்போது சொல்லாமல் அவள் அவனைத் தனியே சந்தித்துச் சொன்னதன் உள்ளர்த்தமும் புரிந்தது.

“பெண் புத்தி பின்புத்தின்னு சொல்வாங்க ஆண்மகனான என் புத்தி அரைப்புத்தி. நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டேன். நான் மடையன்... முட்டாள்” என்று முணுமுணுத்தவாறு தலைதலையாய் அடித்துக்கொண்டான் புவியரசு.
=======================================================================================

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

அரங்கநாதனின் ‘ஆனந்த நாடி’!

ஸ்ரீரங்கம் கோயில். எங்கும் அமைதி சூழ்ந்த ரம்மியமான ராத்திரி நேரம்.

பக்தர் ஒருவர் பகவானைச் சேவிப்பதற்காக வந்தார்.

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் க்கான பட முடிவு
அரங்கநாதன் சன்னதியிலிருந்து விவரிப்புக்கு அடங்காத ஒரு பேரொளி  வெளிப்பட்டது. பகவான்தான் தனக்குக் காட்சிதரப் போகிறாரோ என்றெண்ணி இமை கொட்டாமல் அதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார் பக்தர்.

ஒளியில் மையம் கொண்டிருந்த ஒரு பொருள் ‘விர்ர்ர்ர்’ரென வான் வழியாகப் பறந்து போய் ரங்கநாயகி சன்னநிதிக்குள் நுழைந்தது.

நேரம் கழிந்தது.

பறந்து சென்ற அந்தப் பொருள் வந்த வழியே திரும்பி மீண்டும் அரங்கநாதன் சன்னதிக்குள் புகுந்தது.

அந்தப் பொருள் என்ன?!

அதைத் தன் கண்களால் நோக்கிப் பரவசப்பட்ட பக்தரே[ராமானுஜரின் வலது கையான கூரத்தாழ்வாரின் மகன் பராசரபட்டர்] சொல்கிறார்.....

‘அது அரங்கநாதனின் ஆனந்த நாடி[கடவுளின் ஆணுறுப்பு!?!?!?]. அதாவது, தேக சம்பந்தம் வைத்துக்கொள்ளப் பயன்படும் உறுப்பு. நள்ளிரவிலும் பிராட்டியைச் சேரவேண்டும் என்ற ஆசை அரங்கநாதனுக்கு வந்தது. தன் ஆனந்த நாடியை ரங்கநாயகியிடம் அனுப்பித்[அர்ச்சகர் சன்னதிக் கதவைப் பூட்டிட்டுப் போய்ட்டாராம்] தன் இச்சையைத் தீர்த்துக்கொண்டார் அரங்கநாதன்[எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க!].

இந்நிகழ்வைக் குணரத்ன கோசத்தில் குறிப்பிட்டிருக்கிறாராம் பராசரபட்டர்.

‘ஆணின் போகத்துக்குதான் பெண். எந்த நேரத்திலும் அவளை எப்படியும் பயன்படுத்த ஆணுக்கு உரிமை உண்டு என்பதை அரங்கநாதனின் இந்தச் செயல் உணர்த்துகிறது’ என்பதாக விளக்கம் தந்திருக்கிறாராம் பட்டர்.

நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியரின் ‘இந்துமதம் எங்கே போகிறது?’[ஐந்தாம் பதிப்பு: 2013; நக்கீரன் பப்ளிகேசன்ஸ் - சென்னை] என்னும் நூலிலிருந்து எடுத்தாண்டது.

‘கருமாந்தரக் கடவுள்  கதைகள்’ என்னும் தலைப்பில் ஏற்கனவே ஒரு பதிவு வெளியிட்டிருப்பதால், அதே தலைப்பு இங்கு தவிர்க்கப்பட்டது
=================================================================================
அதிதீவிர இந்துமதப் பற்றாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இது போல் ஏராள ‘சீச்சீ...சீச்சீ’... அசிங்கக் கதைகளை உங்களின் முன்னோடிகள் எழுதிக் குவித்திருக்கிறார்கள். முதலில் இந்தக் குப்பைகளைத் தீக்கிரையாக்குங்கள். அதற்கப்புறம்.....

இம்மாதிரிக் கதைகளைச் சாடுவோரிடம், “இந்துமதத்தை மட்டும் விமர்சிக்கிறாயே, பிற மதங்களைக் கண்டுகொள்வதில்லையே[நான் பிற மதங்களையும் கண்டித்து எழுதியிருக்கிறேன்...’கடவுளின் கடவுள்’ தளத்தில்], ஏன்?” என்று கேள்வி கேட்கலாம்.