திங்கள், 10 ஆகஸ்ட், 2020

‘காம வலை’ அல்லது ‘தர்ம அடி’...குறுங்கதை!

சுமார் இருபது வயது மதிக்கத்தக்க அந்த இளைஞனின் கைகள் முதுகுப்பக்கமாக இழுத்துச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. நெற்றியில் கீறல்கள். உதடுகளில் ரத்தக்கசிவு. வேர்வையில் தெப்பமாய் நனைந்திருந்தான்.  மார்பு, தோள்பட்டை என்று இரண்டு மூன்று இடங்களில் கிழிந்திருந்தது அவனின் சிவப்பு நிறச் சட்டை. 

நான் பார்த்தபோது, கூனிக்குறுகி, தலைகவிழ்ந்திருந்த அவனின் தலைமுடியைப் பற்றி நிமிர்த்தி, “சொல்லுடா, உனக்கு எந்த ஊரு?” என்று கர்ஜித்தார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு கறுத்த உடம்புக்காரர்.

இளைஞன் வாய் திறக்கவில்லை.

”மரியாதையா சொல்லிடு” -முதுகில் உதைத்துக்கொண்டே கேட்டார் முப்பதைக் கடவாத ஒரு முரட்டு வாலிபர். 

“எவ்வளவு தைரியம்  இருந்தா இத்தனை பெரிய கூட்டத்தில் ஒரு பொம்மணாட்டியோட மாரைத் தொடுவே. நீயெல்லாம் அக்கா தங்கச்சிகூடப் பொறக்கலியா?” என்று கேட்ட ஒரு குண்டுப் பெண், தன் கையிலிருந்த தண்ணீர்ப் பாட்டிலால் அவன் தலையில் ஓங்கி ஓங்கி அடித்தார்.

கல்லூரி மாணவன் போல் தென்பட்ட அந்த இளைஞனின் தோற்றம் ஒரு கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவனாகவும் இருக்கலாம் என்று எண்ண வைத்தது. சரமாரியாகத் தர்ம அடி விழுந்துகொண்டிருந்த நிலையில் மௌனம் சுமந்து துவண்டு கிடந்தான்.

“நாம கேட்டா ஊர் பேர் எதுவும் சொல்ல மாட்டான். அதோ அந்தக் கடைகிட்ட நாலஞ்சி போலீஸ்காரங்க இருக்காங்க. அவங்ககிட்டே ஒப்படைச்சுடலாம்” என்றார் வெள்ளையும் சொள்ளையுமாக இருந்த  பெரியவர்.

“இப்படி அவர் சொன்னபோதுதான், வாய் திறந்து பேசினான் இளைஞன். “வேண்டாங்க. இனிமேலும் இந்த மாதிரித் தப்பெல்லாம் பண்ண மாட்டேன். கெஞ்சிக் கேட்டுக்கிறேன், என்னை விட்டுடுங்க.” -அவன் கண்களில் கண்ணீர்.

“விடக்கூடாது. ஆறு மாசமாவது ஜெயில் களி தின்னாத்தான் இவனெல்லாம் திருந்துவான்” என்றார் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

“வேண்டாம். இவன் திருந்துறதுக்கு இந்தத் தண்டனையே போதும். போலீசு அது இதுன்னு இவனோட எதிர்காலத்தைப் பாழடிக்க வேண்டாம். எதுக்கும் சம்பந்தப்பட்ட பொண்ணைக் கேட்டுடலாமே” என்றேன் நான்.

“இவன் தன்னோட மார்பில் கைபோட்டவுடனே, ‘பொறுக்கி நாயே’ன்னு இவனைச் செருப்பால் அடிச்சாங்க அந்த அம்மா. இவன் கன்னத்தில்  நாலு அறை குடுத்துத் தலை மயிரைப் பிடிச்சு இழுத்துக் கீழே தள்ளினாங்க. இவன் அவங்க காலில் விழுந்து ‘மன்னிச்சுடுங்க’ன்னான். ‘ஒழிஞ்சி போடான்’னு அவங்களும் இங்கிருந்து போய்ட்டாங்க. சுத்தியிருந்து வேடிக்கை பார்த்தவங்க இவன் கைகளைக் கட்டிப்போட்டு அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்றார் கூட்டத்தில் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்.

கூட்டம் கலையலாயிற்று.

இளைஞனுக்குக் கை கொடுத்து எழுந்து நிற்க உதவிய ஒரு மனிதாபிமானி, கட்டப்பட்டிருந்த அவனின் கைகளை விடுவித்து, சட்டையின் கிழிந்து தொங்கிய இடங்களை மறைக்கும் வகையில் தன் மேல் துண்டை அவனுக்குப் போர்த்துவிட்டு ஒரு கை பற்றி அழைத்துச் சென்றார்.
=====================================================================

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ஜெய் ஆஞ்சநேயா!!!!!

மிக முக்கியக் குறிப்பு!
இந்தத் தலைப்பிலான ‘ஆஞ்சநேயர்’ குறித்த பதிவில், எளிதில் களைந்திட இயலாத சில பிழைகள் நேர்ந்ததால் அதன் உள்ளடக்கத்தை மாற்றி அமைத்திருக்கிறேன். பொறுத்தருள்க!

மதிய உணவு இடைவேளையில், பாலுவும் கேசவனும் அலுவலக வளாகத்திலிருந்த வேப்ப மர நிழலில் சென்று அமர்ந்தார்கள்.

வழக்கமாக அவர்கள் மதிய உணவு உண்பது அங்கேதான்.

“விஷயம் தெரியுமா?” என்றான் பாலு.

“சொல்லு” என்றான் கேசவன்.

“நம்ம ஸ்டெனோ சுகுமாரனோட மனைவி அவங்க வீட்டு மாடியில் குடியிருந்த பேச்சிலரைக் கூட்டிட்டு ஓடிட்டாளாம்.”

“நிஜமாவா?”

“உன்கிட்டே நான் ஏன் பொய் சொல்லணும்."

“அவன் செக்ஸ் விசயத்தில் கில்லாடி ஆச்சே! ‘அது’ விசயத்தில், பொண்ணுகளைத் திருப்திபடுத்தறது எப்படின்னு வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் ‘பாடம்’ எடுப்பான். உடலுறவின் போது கையாள வேண்டிய டெக்னிக்ஸ், லேகியம், நைட்பில்ஸ் பத்தியெல்லாம் நிறையப் பேசுவான். ’அது’ விஷயத்தில் எல்லாம் தெரிஞ்ச அவன் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?”

வியப்பின் விளிம்பைத் தொட்டிருந்தான் கேசவன்.

உடல் ரீதியா ஒரு பெண்ணைத் திருப்தி படுத்த முடியுமா என்பது இந்நாள்வரை கண்டறியப்படாத ரகசியம். பெண்ணுக்குப் போதும் என்ற மனம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகலாம். இது சுகுமாரனுக்குத் தெரிஞ்சிருந்தா எச்சரிக்கையா இருந்திருப்பான்.”

“உடலுறவில் திருப்தி அடையறது ஆண்களுக்கு மட்டும்தான் சாத்தியமானது. இல்லையா?”

“அப்படித்தான் எல்லா ஆண்களும் நினைச்சிட்டிருக்காங்க. அதுவும் தப்பு. ஆணின் உடம்பிலேயிருந்து உயிர்ச்சத்து வெளியேறியதும் கிடைக்கிற திருப்தி தற்காலிகமானது. வயசைப் பொருத்து, சந்திக்கிற பெண்ணைப் பொருத்து, சூழ்நிலையைப் பொருத்து, மிகச் சில மணி நேரங்களிலேயே மீண்டும் காமம் அரும்ப ஆரம்பிச்சிடும். அதைத் தணிக்க அவனுக்கு மீண்டும் பெண் தேவைப்படுகிறாள். பெண்ணாகட்டும் ஆணாகட்டும் உடலுறவில் திருப்தி என்பது சாத்தியமில்லாத ஒன்னு என்பதே என் நம்பிக்கை.”

“சரிதான். இந்தத் திருப்தியற்ற நிலைதான், மனுசங்களைக் காலமெல்லாம் வெறி பிடிச்சி அலைய வைக்குது” என்றான் கேசவன்.

ஒரு முறை அழகான ஒரு பெண்ணை அனுபவிச்சவன், இன்னும் அழகான பெண் கிடைச்சா அனுபவிக்கலாமேன்னு நினைக்கிறது இயற்கை. ஒரு தடவை பத்து நிமிசம் புணர்ச்சி செஞ்சவன், அடுத்த தடவை இன்னும் அதிக நேரம் செய்யணும்னு நினைக்கிறதும் இயல்புதான். இம்மாதிரி எண்ணங்களுக்கு அணை போட்டுத் தடுத்து நிறுத்துவது சமுதாயக் கட்டுப்பாடும், நம்மவர்கள் வகுத்துக்கொண்ட ஒழுக்க நெறிகளும்தான். அவற்றைப் பின்பற்ற நினைக்கிற மனசும் ஒரு முக்கிய காரணம்” என்றான் பாலு.

“உண்மைதான். இன்னும் வேணும் இன்னும் வேணும்னு அலையறதுக்கும் போதும்னு அடங்கி வாழறதுக்கும் மனசுதான் காரணம்.”

“மனசைப் பக்குவப்படுத்திப் பயிற்சியும் கொடுத்தா, பத்து நிமிசம் அனுபவிச்ச சுகத்தைப் பத்து மணி நேரம் அனுபவிச்சதாப் பாவிச்சி சந்தோஷம் காணமுடியும். ஒரே ஒரு தடவை அனுபவிச்ச இன்பத்தை மனசில் தேக்கி வெச்சி, ஒட்டு மொத்த வாழ்நாளையும் அது பற்றிய நினைப்பிலேயே கழிச்சிட முடியும். ஆனா மனுசங்க, இப்படியான எண்ணங்களை வளர்த்து இதுக்கான முயற்சிகளில் ஈடுபடுறதில்லை. வாழ்ந்து முடிக்கிறதுக்குள்ள அனுபவிச்சித் தீர்த்துடணும்னுதான் அலையறாங்க. விதி விலக்கானவங்க ஒரு சிலர்தான். இதுல ஆண் பெண்ணுங்கிற பேதங்களுக்கும் இடமில்லை. இன்னிக்கி முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. நாளை பேசுவோம்” என்று எழுந்தான் பாலு.

"என் வீட்டில் எனக்குப் பெண் பார்த்துட்டிருக்காங்க. கல்யாணம் பண்ணிக்கிறதை நினைச்சா பயமாயிருக்கு” என்றான் கேசவன்.

“பயப்பட ஒன்னும் இல்ல. இம்மாதிரியான நல்ல சிந்தனைகளை உன் வருங்கால மனைவிக்குச் சொல்லிப் புரிய வெச்சுடு. வாழ்க்கை சந்தோசமா கழியும்.”

கேசவனின் முதுகில் தட்டிக் கொடுத்தான் பாலு.
=======================================================================
இது, 2013ஆம் ஆண்டுப் படைப்பு