சனி, 10 ஏப்ரல், 2021

வெளியாகுமா நித்தி[எ]கலியுகக் கண்ணனின் 'ஜலக்கிரீடை'க் காணொலி?!?!

வெங்கடேசப் பெருமாள் போல, சங்கும் சக்கரமும் ஏந்தி, ஏராள நகைகளுடனும் கிரீடத்துடனும் புகைப்படம் வெளியிட்டிருக்கிறார் 'அருள்திரு' நித்தியானந்தா சுவாமிகள். வதனத்தில் கடலளவு கருணாமிர்தம் பொங்கி வழிய, "பக்தகோடிகளே, வாருங்கள் நம் கைலாசாவுக்கு" என்று அழைப்பும் விடுத்துள்ளார் தம் திருவடி தொழுவோருக்கு.

கைலாசா நாட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து விமான சேவை தொடங்கவிருப்பதாகவும்,  இ-கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த 'அவதாரப் புருஷர்' அறிவித்துள்ளார்[ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளார்களாம். அவர்களில் அடியேனும் ஒருவன்! ஹி...ஹி...ஹி!]. சுவாமிகளின் முகநூல் பக்கத்திலிருந்து நகலெடுத்த படங்களும் வெளியாகியுள்ளன.

கைலாசாவில் ரிசர்வ் வங்கியின் பணியும் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே நாணயங்கள் வெளியிட்டுள்ளார் சுவாமிகள்.

நாள்தோறும், காணொலியில் தம் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதை வழக்கமாகக் கொண்ட இந்தக் கலியுகக் கருணாமூர்த்தி, கொஞ்சம் நாட்களுக்கு முன்பு முழுமுதல் கடவுளான சிவபெருமானாகக் காட்சியளிக்கும் அவர்தம் புகைப்படத்தைத் தம் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்போது[08.04.2021], ஏழுமலையானாக அருள்மழை பொழியும் படத்தையும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, பக்தர்களை ஆனந்தப் பரவசத்தில் மூழ்கடித்துள்ளார்.

வெகு விரைவில், கலியுகக் கண்ணனாக, கவர்ச்சிக் கன்னியருடன் 'ஜலக்கிரீடை' செய்யும் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணொலியாகப் பகிர்ந்துகொள்வாரா ராமகிருஷ்ண பரமானந்த நித்தியானந்தா சுவாமிகள்?!
பகிர்வார்.

பார்த்துப் பார்த்துப் பார்த்துப் பரமானந்த சுகம் பெறலாம்.

அந்தப் புனித நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்! ஹி...ஹி...ஹி!

                                 *                              *                                   *                                  *

விடை தெரியாத கேள்வி:

சிறுமியர் தொடர்பான ஆபாசக் காணொலியைப் பதிவிறக்கம் செய்தால், செய்தவனை எங்கிருந்தாலும் ஓடிப்போய்க் கைது செய்கிறது இணையக் குற்றப் புலனாய்வுத் துறை.

இணையத் தொழில்நுட்பம் பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இந்த 'வேடதாரி'யைக் கண்டுபிடித்துக் கைது செய்ய முடியவில்லையே, ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

தமிழ் வளர்க்கும் தமிழ்ச்சரத்திற்கு.....

தமிழ்ச்சரத்தின் உரிமையாளர் அவர்களுக்கு, வணக்கம். 

'தமிழ்ச்சரம்' திரட்டியில் இணைப்புப் பெற்றுள்ள பதிவர்களில் நானும் ஒருவன்.

தமிழ்ச்சரத்தில் என் பதிவுகள் வெளியாவதால் நான் சிறிதளவேனும் பயன் அடைந்திருத்தல்கூடும். ஆனால், என் பதிவுகளால் தமிழ்ச்சரத்தின் தரம் கூடியுள்ளதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.

உங்களின் நேரத்தை விரயமாக்க விரும்பாததால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன்.

நேற்று[08.04.2021] 'ஆதியோகி சிவன்'... அப்பட்டமான கட்டுக்கதை' https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_8.html என்னும் தலைப்பில் ஒரு பதிவு எழுதினேன். அது தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படவில்லை.

அநாகரிகமான வார்த்தைகளை அதில் நான் பயன்படுத்தவில்லை என்பது என் நம்பிக்கை. இருந்தும், அது இணைக்கப்படாததற்கான காரணம் எனக்குத் தெரியாது. அது, ஜக்கி வாசுதேவின் மனதை நோகடிக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்; வேறு நிர்ப்பந்தமும் இருக்கலாம்.

ஒட்டுமொத்தத் தமிழர்களையே முட்டாள்கள் என்று நினைக்கும் அந்த மனிதரின் செயல்பாடுகளால் என் போன்றவர்கள் மனம் நோவது பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

பதிவை நிராகரிப்பதற்குக் கிஞ்சித்தும் இடம் தராத, 'கதை சொல்லல்'...இளம் கதாசிரியர்களுக்கு மட்டும்' https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_9.html என்னும் தலைப்பிலான பதிவை இன்று[09.04.2021] முற்பகலில் இணைத்தேன். இதுவும் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படவில்லை.

இதற்கான காரணத்தையும் என்னால் அறிய இயலவில்லை. 

அறியத் தருதல் வேண்டும் என்று உங்களை வற்புறுத்தவும் மாட்டேன். [இதற்கெல்லாம் உங்களுக்கு நேரமும் இருக்காது].

காரணம், திரட்டியின் உரிமையாளர் நீங்கள். ஒரு பதிவை இணைப்பதும் இணைக்க மறுப்பதும் உங்கள் விருப்பம் சார்ந்தது.

சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்துவிடுகிறேன்.

காரணத்தை அறியும் வாய்ப்பே இல்லாத நிலையில், ஒரு பதிவை நிராகரிப்பது, அதைப் படைத்தவனின் மனதை நோகடிக்கும் செயலாகும்[இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் என் பதிவுகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பல பதிவுகளை இணைத்துக்கொண்டதற்காக நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன்].

என் வேண்டுகோள்:

உடனடியாக என் பதிவுகளுக்கான இணைப்பைத் துண்டியுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும், இணைப்புத் தருமாறு இனியும் வேண்டுகோள் வைக்க மாட்டேன்[இணைப்பை நிரந்தரமாகவே துண்டித்துவிட்டீர்கள் என்றும் நினைக்கிறேன்].

இந்த மடலை, என் தளத்தில் வெளியிடுவதோடு உங்களின் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கும் அனுப்புகிறேன். தமிழ்ச்சரத்தில் இணைக்க மாட்டீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை.

தமிழ் வளர்க்கும் நல்ல நோக்குடன் லாப நோக்கமின்றித் தமிழ்த் திரட்டியைப் பராமரிக்கிற நீங்கள், உங்களின் நேரத்தை வீணடித்ததைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் நன்றி சொல்லி அமைகிறேன்.

நன்றி... மிக்க நன்றி.

======================================================================================