புதன், 11 பிப்ரவரி, 2026

“கடவுளை மற; மனிதனை நினை”... தேவை நினைவுகூர்தல் தினம்!

முதியோர் தினம், மகளிர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், காமுகர் தினம்[ஹி...ஹி...ஹி!] என்றெல்லாம் உலகளவில் சிறப்பு ‘நினைவுகூர்தல்’ தினங்கள் கொண்டாடப்படுகின்றன.

இவற்றோடு, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினமும் கொண்டாடப்படுதல் வேண்டும்.

நிரூபிக்கவே இயலாத கடவுளைப் பற்றிச் சிந்தித்ததால் ஆன்மிகம் போற்றும் மதங்கள்[விதிவிலக்கானவை உள] பல தோன்றின. கருத்து வேறுபாடுகள் காரணமாக அவற்றிடையே மோதல்கள் நிகழ்ந்தன; போர்கள் வெடித்தன; உலகம் பெரும் பெரும் அழிவுகளை எதிர்கொண்டது.

சுருங்கச் சொன்னால், கடவுளைப் போற்றும் மதங்களால் விளைந்த நன்மைகளைக் காட்டிலும் நேர்ந்த தீமைகள் மிக மிக மிக அதிகம். இதைக் கருத்தில் கொண்டுதான் பெரியார், “கடவுளை மற; மனிதனை நினை” என்றார்.

ஆண்டுதோறும், பல மூடநம்பிக்கைகளுக்குக் காரணமான  கடவுளை மறந்து, ‘கடவுளை மற. மனிதனை நினை’ தினம் கொண்டாடப்பட்டால்.....

மனிதப் பண்பு சிறக்கும். சாதி, மதம், இனம், மொழி போன்றவற்றால் உருவாகும் வேறுபாடுகள் மறையும். மக்களிடையே மோதல்கள் இல்லை; போர்கள் இல்லை; பேரழிவுகளும் இல்லை என்னும் நிலை உருவாகும்.

சுருங்கச் சொன்னால்.....

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழ்வார்கள்[பிற உயிர்களுக்கு உதவுவதும் நிகழும்].

மனிதர்கள் மனிதர்களுக்காகவே வாழும் காலம் வருமா?

‘வரும்’ என்று நம்புவோம். 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

அன்று நாம் ஆங்கிலேயருக்கு அடிமை! இன்று?

றிவியல் துறையின் முன்னோடிகளாக இருந்த ஆங்கிலேயர்களின் ‘ஆதிக்க வெறி’தான் உலகின் பெரும்பாலான நாடுகளைக் கைப்பற்றி ஆள வழிவகுத்தது.

ஆதிக்க வெறி இருந்த அளவுக்குத் தங்களின் மொழியான ஆங்கிலத்தை, அடக்கி ஆண்ட மக்கள் மீது திணிக்கும் வெறி அவர்களுக்கு இருந்ததில்லை.

அறிவியல் அறிவை அனைவரும் பெற்றிட வேண்டும் என்னும் எண்ணத்துடன்தான்,  கல்வி நிறுவனங்களில் அதைப் பாட மொழியாக ஆக்கினார்கள்; அறிவியல் கற்கும் ஆர்வத்தில் மக்களும் அதைக் கற்றார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை, ஆங்கிலேயரிடமிருந்து நாம் விடுதலை பெற்றாலும், விடுதலைக்குப் பிறகு நம்மை[+ஒட்டுமொத்த இந்தியாவையும்] ஆளுகிறவர்கள் ‘இந்தி’யர்கள்தான்[இந்தி அல்லாத பிற மொழிக்காரர்களுக்கு உயர் பதவிகள் தரப்பட்டாலும், அவர்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் அவர்கள்> குஜராத்திகளான மோடி, அமித்ஷா போன்றவர்கள் பதவிக்காக இந்தியைத் தங்களின் தகப்பன் மொழியாக ஏற்றுக்கொண்டவர்கள்]. 

அனைத்து அதிகாரங்களும் தங்களுக்கு இருக்கிறது என்னும் ஆணவத்தில்தான், இந்தியைத் தவிரப் பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கும் வேலையை அவ்வப்போது அவர்கள் முடுக்கிவிடுகிறார்கள். இதன் மூலம் பிற மொழிகளைப் பலவீனப்படுத்தி அவற்றை முற்றிலுமாய் அழித்துவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

கீழ்க்காண்பவை அண்மைக் காலத் திணிப்புகளில் இடம்பெற்றவை:                            [நன்றி: இந்து தமிழ்]

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற நம்மால்[+பிற மொழிக்காரர்கள்] ஆதிக்க இந்தி வெறியரிடமிருந்து விடுதலை பெறுவது சாத்தியமா?

எப்படி? எப்போது?