செவ்வாய், 3 மே, 2016

ஐயோ பாவம் ஐயப்பசாமி!!!

ஐயப்பசாமி பிரமச்சாரியாம். அழகிகளைப் பார்த்தால் காமம் வரும் என்று மரங்கள் அடர்ந்த மலை உச்சியில் போய் ஒளிந்துகொண்டாராம்! பிரமச்சரியம் காக்கும் பக்தர்கள் எங்கே போய் ஒளிவார்கள்?!?!

கேரள மாநிலம், சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோவிலுக்குள்       பெண்களை [10 முதல் 50 வயது] அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளமை யாவரும் அறிந்ததே.

‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி சபரிமலைக் கோயிலில் ஆண் பெண் பாகுபாடு கூடாது’ என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில்.....

‘ஐயப்பன் ஒரு பிரமச்சாரி. தன் பிரமச்சரியத்திற்குப் பங்கம் நேரக் கூடாது என்று வனப்பகுதியில் மலை உச்சியில் அமர்ந்துள்ளார். கோயிலுக்குப் பெண்கள் வருவதை அவர் விரும்பவில்லை’ என்று கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்’[காலைக்கதிர், 03.05.2016] என்பது செய்தி.

“கடவுளுக்கும் காமம் வருமா? அதைக் கட்டுப்படுத்துவது ஆனானப்பட்ட கடவுளுக்கே சாத்தியம் இல்லையா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினால்.....

“ஆமாம். ஐயப்பனென்ன, அவருக்கு அப்பனான சிவபெருமானையே பெண்ணாசை ஆட்டிப்படைத்திருக்கிறது” என்று சொல்லி, மோகினி வடிவெடுத்த ஆண் கடவுளான விஷ்ணுவை அவர் புணர்ந்ததால் ஐயப்பன் அவதரித்த கதை, அவர் குந்தவைத்து இரு கால்களையும் இறுகக் கட்டிவைத்திருக்கும் கதை, தேவர்களின் குருவான வியாழபகவான் இட்ட சாபத்தால் சிவலிங்கம்[சிவ லிங்கம்] தோன்றிய கதை, சிவபெருமான் பேரழகி வடிவம் கொண்டு முழு நிர்வாணமாய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கு அடக்கிய கதை என்றிவற்றையும் இவை  போன்ற பிற ‘உன்னதமான’ கதைகளையும் நீதிபதிகளிடம் எடுத்தியம்புங்கள். ஊடகங்கள் வழியாக ஒட்டுமொத்த மனிதகுலமும் இவற்றை அறிந்து இன்புறட்டும். ஐயப்பன் புகழ் பரவட்டும்.

“ஐயப்பன், பெண்கள் வருவதை விரும்பவில்லை என்கிறீர்கள். அவர் அப்படி எப்போது சொன்னார்? யாரிடம் சொன்னார்?” என்றெல்லாம் நீதிபதிகள் கேள்விகள் கேட்டுக் குடைந்தால், “தனிப்பட்ட முறையில் யாரிடமும் சொல்லவில்லை; அசரீரியாகச் சொன்னார். அது அண்டவெளியெங்கும்  எதிரொலித்தது. ஞானிகள் எழுதி வைத்தார்கள்” என்று சொல்லிவிடலாம்.

தேவைப்பட்டால், ‘அண்டசராசரம்...வேதம்... பூதம்...கடவுள்...அசரீரி...’ என்று கண்ட கண்ட கப்சாக் கதைகளை அள்ளிவிடலாம். அதற்கப்புறம் நீதிபதிகள் கேள்வி கேட்கமாட்டார்கள்; ‘இது கடவுள் சமாச்சாரம். நமக்கெதற்கு வம்பு’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்துவிடக்கூடும்.

ஆக, வாலிபப் பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குள் நுழைவது இனியும் சாத்தியப்படாதென்றால், ஐயப்பன் எந்தவித இடையூறுமின்றித் தன் பிரமச்சரிய வாழ்வைத் தொடர்வார்; வருகைபுரிவோருக்கு அருள்பாலிப்பார்.

வாழ்க...வளர்க ஐயப்பசாமி புகழ்!

திங்கள், 2 மே, 2016

ராகுகாலத்தில் தாலி கட்டிய நம் அண்டை மாநில முதலமைச்சர்!!!

“மூடநம்பிக்கை மீதான நம்பிக்கை எனக்குச் சிறு வயதிலிருந்தே இல்லை. நல்ல நேரம் பார்த்து என் திருமண நாள் [முகூர்த்தம்] நிச்சயிக்கப்பட்டது என்றாலும், நான் தாலி கட்டியது என்னவோ ராகுகாலத்தில்தான்” [தினகரன், 02.05.2016] என்று சொல்லியிருப்பவர் நம் அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முதலமைச்சர் சித்தராமையா அவர்கள்.

"சாம்ராஜ் நகருக்குச் சென்றால் பதவியை இழந்துவிடுவேன் என்று கூறினார்கள். கடந்த காலங்களில் ஆறு முறை அங்கே சென்றுள்ளேன். மூன்றாண்டுகளாக முதல்வர் பதவியில் தொடர்கிறேன். எஞ்சியுள்ள இரண்டாண்டுகளும் பதவியில் நீடிப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார் சித்தராமையா.

தம் நெஞ்சில் மூடத்தனங்களுக்குக் கிஞ்சித்தும் இடம் தராத கர்நாடக முதல்வர், மக்கள் மனங்களிலிருந்தும் அவற்றை முற்றிலுமாய் அகற்ற்றிடவும் முடிவெடுத்திருக்கிறார். 

அதன் பொருட்டு, ‘மூடநம்பிக்கைக்கு எதிரான வலிமையான  தடைச்சட்டம் கொண்டுவரப்படும்’ என்றும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதிபடக் கூறியிருக்கிறார்; மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைத் தடைச் சட்டம் அமலில் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தலைமைச் செயலகம் கட்டுவதற்கு[அது, மதச் சார்பற்ற ஓர் அரசின் உடைமை என்பதை மறந்து] வாஸ்து பார்க்கும் ‘வாஸ்து அடிமை’யான ஆந்திர முதல்வரையும், வாயுப்பிடிப்புக்கும் வயிற்றுவலிக்கும்கூட ‘யாகம்’ நடத்தும் தமி்ழ்நாடு முதல்வர், தெய்வத்தின் தெய்வம் ‘அம்மா’ அவர்களையும் நோக்க, கர்நாடக முதல்வர் மிகப் பல மடங்கு மேம்பட்டவராகத் தெரிகிறார். 

அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுவோம். அவர்தம் நல்லுணர்வைப் புரிந்துகொண்டு முழு ஒத்துழைப்புத் தருவது கர்நாடக மக்களின் தலையாய கடமையாகும்.