வியாழன், 31 மே, 2018

ஜோதிடலோகம்![பொழுதுபோக்குக் கதை]

சொர்க்கத்தை மேற்பார்வையிட்டுத் திரும்பிய இறைவி, இறைவன் வெற்று வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டு, “பிரச்சினை எதுவானாலும் தியானம் பண்ணினா தீர்வு கிடைக்கும்னு சொல்லியிருக்கேன். ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கீங்கன்னு உங்க முகமே சொல்லுது. மோனத்தவத்தில் மூழ்காம பிது பிதுன்னு முழிச்சிட்டிருக்கிங்களே, ஏன்?'' என்று கேட்டார்.

“அதுக்குத்தான் உட்கார்ந்தேன். மனசை ஒருமுகப்படுத்த முடியல” என்றார் இறைவன், வருத்தம் தோய்ந்த குரலில்.

“ஏனாம்?”

“பகுத்தறிவாளன்கிற பேர்ல, கண்ட கண்ட கசமாலங்கள் எல்லாம் 'கடவுள் எப்போ பிறந்தார்? எப்போ மறைவார்? எப்பவும் இருந்துகொண்டே இருப்பார்னா அது எப்படிச் சாத்தியம்?'னு அடுக்கடுக்கான கேள்விகளால கிடுக்கிப்பிடி போட்டுட்டே இருக்கானுக. நம்ம அவதாரம்னு சொல்லிட்டுத் திரியற ஆட்களால அவங்களைச் சமாளிக்க முடியல. யோசிச்சிப் பார்த்தா எனக்குமே பதில் தெரியல. இனி என்ன செய்யறதுன்னும் புரியல.”

“கவலையை விடுங்க. பூலோகத்திலிருந்து ஒரு ஜோதிடரை வரவழைச்சி, 'கோடிகோடி கோடானுகோடி பிரபஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால, இன்ன நட்சத்திரத்தில் கடவுள் தோன்றினார்; யுகயுகயுகாதி ஆண்டுகளுக்கு அப்புறம், இன்ன நட்சத்திரத்தில் மறைவார்; மறுபடியும் தோன்றுவார்...மறைவார்...தோன்றுவார்..மறைவார்..... இப்படியாகத்தானே, இடைவெளி விட்டுத் தோன்றுவதும் மறைவதுமாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்' அப்படீன்னு பூலோகத்திலுள்ள எல்லா ஊடகங்களுக்கும் அறிக்கை தரச் சொல்லிடறேன். யோசிச்சி யோசிச்சி மண்டை காய்ந்து நாத்திகர்கள் 'மெண்டல்' ஆயிடுவாங்க. அப்புறம் எவனும் கேள்வி கேட்க மாட்டான்” என்றார் இறைவி.

“ஜோதிடர்கள் விடுற அறிக்கையை மக்கள் நம்புவார்களா?” -இது இறைவனின் சந்தேகம்.

“என்ன நீங்க, உலகம் புரியாத கடவுளா இருக்கீங்க. பூலோகமே இந்த ஜோதிடர்கள் பின்னாலதான் போயிட்டிருக்கு” என்றார் இறைவி.

இறைவனின் வதனத்தில் பேரானந்தம் பரவியது!

---------------------------------------------------------------------------------------------------------------

புதன், 30 மே, 2018

தமிழனுக்குப் புத்தி கற்பிக்கும் கன்னடச் சிறுவன்!

தமிழ் தம் தாய்மொழியாக இருந்தும் அதை மதிக்காத பெற்றோரும், தப்பும் தவறுமாகப் பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் இளைஞர்களும் மாணவர்களும் நிறைந்து காணப்படும் மாநிலம் தமிழ்நாடு.

இம்மாநிலத்திலுள்ள கரூர் மாவட்டம் தளவாபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் மனைவி தீபா. இவர்களின் 3 மகன்களில் இளையவர் பிரவீன்.

                                              நன்றி: தி இந்து[நாளிதழ்]
இக்குடும்பத்தாரின் தாய்மொழி கன்னடம். 

7ஆம் வகுப்பில் படிக்கும் பிரவீன், தமிழின் மீதான ஆர்வம் காரணமாகவும், தலைமை ஆசிரியை பவுனு அவர்களின் ஊக்குவிப்பு காரணமாகவும் தமிழைப் பிழையின்றிக் கற்றதோடு, 1330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்திருக்கிறார்.

அதிகார எண்ணையும் குறளின் எண்ணையும் சொன்னால் போதும், அதை அடிபிறழாமல் பிழை சிறிதுமின்றிப் பொருள் புரியும் வகையில் ஒப்பிக்கிறார். இவருடைய தமிழ் மீதான ஆர்வத்தையும் சாதனையையும் பாராட்டிப் பலரும் மகிழ்கிறார்கள்.

பிரவீனின் அறிவாற்றல் கண்ட கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அவர்கள் பெரிதும் அகமகிழ்ந்து இவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்திருக்கிறார்[தி இந்து, 30.05.2018].

''இனியும் தமிழ் வழியில் படிப்பதோடு[ஏற்கனவே தமிழ் வழியில்தான் கல்வி கற்கிறார்] எதிர்காலத்தில் சிறந்த தமிழாசிரியராக ஆவதே என் லட்சியம்'' என்றும் பிரவீன் அறிவித்திருக்கிறார்.

பிரவீனின் செயல்பாடு, தமிழின் பெருமையை ஒரு படி உயர்த்தியிருக்கிறது; தாய்மொழியாம் தமிழைப் புறக்கணிக்கும் மிக மிகப் பெரும்பான்மைத் தமிழருக்குப் புத்தி கற்பித்திருக்கிறது.

பிழைப்புக்காக வேற்று மொழிகளைக் கற்றாலும் தாய்மொழியை அவமதித்தல் கூடாது என்பதை இனியேனும் தமிழர்கள் உணர்வார்களா?

காத்திருப்போம்.

பிரவீனுக்கு ஒரு வேண்டுகோள்:

#தமிழாசிரியர் ஆவது தங்களின் குறிக்கோள் என்பதை அறிந்து மகிழ்கிறேன். ஆனால்.....

தமிழாசிரியரை மதிக்கும் நல்ல மனம் தமிழர்களுக்கு இல்லை; ''தமிழைப் போற்றுங்கள்'' என்று ஒரு தமிழாசிரியர் சொன்னால் அதைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஆகையினால்.....

தமிழாசிரியர் ஆவது என்னும் கொள்கையைக் கைவிடுங்கள். தமிழ் வழியில் கல்வி கற்று, ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ உயருங்கள். இவர்களில் ஒருவராக இருந்து, ''நான் தமிழ் வழியில் கல்வி கற்றுத்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை எய்தியிருக்கிறேன். உங்கள் பிள்ளைகளையும் தமிழ் வழியில் கற்க வையுங்கள்; ஆங்கில அறிவையும் வளர்த்துவிடுங்கள்'' என்று அறிவுறுத்தினால், அதற்குத் தமிழ்ப் பெற்றோர்கள் மதிப்பளிக்கக்கூடும்#

கரூர்ப் பகுதியைச் சார்ந்த வலைப்பதிவர்கள்  என்னுடைய இந்த வேண்டுகோளைப் பிரவீனின் கவனத்திற்குக் கொண்டுசென்றால் நான் மிகவும் நன்றி பாராட்டுவேன்.

நன்றி.