திங்கள், 26 மே, 2025

சாகும்போதும் அழகு சிதைவதை விரும்பாத அதிசயப் பெண்!!!

வாழ்நாள் முழுதும் அழகாகத் தோன்ற வேண்டும் என்று ஆசைப்படுவது மனித இயல்பு. இந்த ஆசை பெண்களுக்குச் சற்றே[மிகவும்?] அதிகம் எனலாம்.

மரணத்தைத் தழுவும்போதுகூட தன் ‘மேனி அழகு’ குறைந்துவிடக்கூடாது என்று பெண்ணொருத்தி ஆசைப்பட்ட செய்தி மனதைப் பெரிதும் நெகிழச் செய்தது[இணையத்தில் வாசித்தது].

அந்தப் பெண்.....

ஹிட்லரின் ஆசை நாயகியாக இருந்து, மனைவியாகவும் ஆன[2ஆம் உலகப் போரில் தோல்வியைத் தழுவிய நிலையில் பாதாள அறையில் அவர் பதுங்கியிருந்தபோது] ஈவா பிரவுன்.

மே 2, 1945 அன்று பெர்லின் சரணடைந்த பிறகு, ஹிட்லர் தப்பிச் செல்வார் என்று சோவியத் தரப்பினர் எதிர்பார்த்தார்கள். ஹிட்லரோ தற்கொலை புரிவது என்ற முடிவை மேற்கொண்டார்.

பிடிபட்டதும் தான் மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ‘மிருகக்காட்சிச் சாலையில் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்கு போல’ நடத்தப்படுவதை அவர் விரும்பாததே காரணம்.

மனைவி ஈவா பிரவுனுடனும் அவரது பெண் செயலாளர்களுடனும் தற்கொலைக்கான பல்வேறு முறைகள் குறித்து அவர் விவாதித்தார்.

இறுதியில், அவர் இரண்டு உறுதியான முறைகளைப் பயன்படுத்தினார், துப்பாக்கியை அவரது வலப்புற நெற்றிப்பொட்டில் குறிவைத்து, தூண்டுதலை[trigger] இழுத்த அதே நேரத்தில், ஒரு சயனைடுக் குப்பியையும்[காப்ஸ்யூல்] கடித்தார்.

‘திருமதி ஹிட்லர்[ஈவா பிரவுன்], தற்கொலைக்குப் பின் தன் சடலம் அழகு குன்றாமல் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் விஷத்தை மட்டுமே பயன்படுத்தினார்’ என்பது வரலாறு வழங்கும் சோகச் செய்தி.

சனி, 24 மே, 2025

வாழ்க பாரத்! ஒழிக ‘ஸ்ரீ’கிஸ்தான்!!

‘ஸ்ரீ-இந்தியா’ போர் குறித்த சூடான செய்திகள் அடுத்தடுத்து ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் வைஷாலி நகர்ப் பகுதியில் உள்ள இனிப்புக் கடையின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின், தான் தயாரிக்கும் ‘மைசூர் பாக்’இன் பெயரை, ‘மைசூர் ஸ்ரீ’ என்று மாற்றியிருப்பது[ஊடகங்கள் பலவற்றிலும் வெளியான செய்தி> அரசியல் தலைவர்களோ வேறு எவருமோ இதைக் கண்டித்ததாக அறியப்படவில்லை] நம் பிரதமர் மோடி மட்டுமல்லாமல் இந்தியக் குடிமக்களாகிய நம் அனைவரின் நெஞ்சங்களிலும் தேவாமிர்தத்தைப் பொழிந்துள்ளது.

வாசிப்பின்போது, ‘பாக்’ தட்டுப்பட்டால் அதை ‘ஸ்ரீ’ ஆக்கி வாசிப்பதென்று[எங்கு எதைப் படித்தாலும் பாவி நம் எதிரி ‘பாக்’கிஸ்தானின் ‘ஸ்ரீகிஸ்தான்’ நினைவே வருதல் கூடாது] அடியேனும் முடிவெடுத்துள்ளேன்.

அனைத்து வரலாற்று ஆவணங்களிலும் பாட நூல்களிலும்கூட ‘பாக்’ நீக்கப்பட்டு ‘ஸ்ரீ’ சேர்க்கப்படுதல் வேண்டும்.

சற்று முன்னர், தற்செயலாக விக்கிப்பீடியாவில் வாசித்த ‘ஸ்ரீ’ மாவட்டம்[ஆசாத் காஷ்மீர்] பற்றிய சிறு குறிப்பு பின்வருமாறு:

#ஸ்ரீ மாவட்டம்(Bagh District): இது ‘ஸ்ரீ’இன் ஆக்கிரமிப்பு ஆசாத் காஷ்மீர் பகுதியின் 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ‘ஸ்ரீ’ நகரம் ஆகும். 770[சதுர கிலோ மீட்டர்] பரப்பளவு கொண்ட ‘ஸ்ரீ’ மாவட்டத்தின்[2017 ‘ஸ்ரீ’யின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி] மக்கள் தொகை 3,71,919 ஆகும்.

இம்மாவட்டதின் அலுவல் மொழி உருதுவாக இருப்பினும், மக்கள் பகாரி மொழி மற்றும் குஜ்ஜர் மொழிகளைப் பேசுகின்றனர். உருது மொழியில் ‘ஸ்ரீ’ என்பதற்குத் தோட்டம் என்று பொருள். இம்மாவட்டத்தில் ‘ஸ்ரீ’ கோட்டை உள்ளது# -விக்கிப்பீடியா[தமிழ்]

* * * * *

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

வாழ்க பாரத்[இந்தியா]! ஒழிக ஸ்ரீகிஸ்தான்!!