சனி, 31 அக்டோபர், 2026

கைதிகள் தப்பிச்செல்வதைத் தடுக்கத் தலைவர் ஜோசப்புக்கு 2 பரிந்துரைகள்!!!

//தேனியில் உள்ள தெக்கம்பட்டி துணைச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பிச்சென்ற ஒரு வாரத்திற்குள், கோயம்புத்தூர் மத்தியச் சிறையிலிருந்து ஒரு விசாரணைக் கைதி வெள்ளிக்கிழமை இரவு தப்பிச் சென்றார்.

அதே கைதி காவல் நிலையக் காவலில் இருந்து தப்பிப்பது இது இரண்டாவது முறையாகும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தேனிச் சம்பவம் சிறைத் துறையின் பாதுகாப்புக் குறைபாடு குறித்துக் கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக ஒரு அரசியல் புயலையும் கிளப்பியுள்ளது கோயம்புத்தூரில் இடம்பெற்ற அண்மை நிகழ்வு //[https://www.newindianexpress.com/cities/coimbatore/2026/Oct/31/remand-prisoner-escapes-from-coimbatore-prison].

தமிழ்நாட்டை எவர் ஆண்டாலும், ஆண்டவனே ஆட்சிப் பொறுப்பேற்று, அறநெறி பிறழாமல், வெகு சிறப்பாக ஆட்சி நடத்தி, காவல்துறையினருக்குப் பயிற்சி மேல் பயிற்சி கொடுத்தாலும், கைதிகளைத் தப்பவிடாமல் காப்பதில் அவர்கள் கோட்டைவிடவே செய்வார்கள்[சோப்பளாங்கிகள்?].

எனவே, கீழ்க்காணும் அதி தீவிரச் செயல்பாடு[நம் பரிந்துரைகள்]களின் மூலம், கைதிகள் காவல்காரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிச் செல்வதை அறவே தடுக்க இயலும் என்பதை, நம் முதல்வர் ஜோசப் அவர்களுக்கு மிக்கப் பணிவுடன் தெரிவிக்கிறோம்.

பரிந்துரை 1:

ஜோசப் அவர்கள் அவ்வப்போது ‘ரோடுஷோ’ செல்லுவதற்குப் பதிலாக, நாள் தவறாமல் அதை[ரோடுஷோ] நடத்தி, வேடிக்கை பார்க்க வருவோருக்குக் கையசைத்தல், காதல் சின்னம் காட்டுதல், பறக்கும் முத்தம் தருதல் என்று அவர்களை இன்புறுத்தினால், அவற்றால் உத்வேகம் பெறும் அவர்கள், தப்பிச் செல்லும் கைதிகளைச் சில மணி நேரங்களில் தேடிப் பிடித்து, நேரடியாக முதல்வரிடமே ஒப்படைப்பார்கள்[காவலர்களிடம் ஒப்படைத்தால் மீண்டும் தப்பிவிடுவார்கள்].

பரிந்துரை 2:

தப்பியோடும் கைதிகளைப் பொதுமக்கள் பிடிக்கச் சில மணிநேரம் ஆகும் என்பதால், ஜோசப் அவர்கள் தினந்தோறும் ஒரு தேவாலயத்திற்கோ மசூதிக்கோ, இந்துக் கோயிலுக்கோ சென்று வழிபட்டால், மேற்கண்ட மடமதச் சாமிகள் ஒருங்கிணைந்து தேடுதல் வேட்டை நடத்தி, சில நிமிடங்களிலேயே கைதிகளைப் பிடித்து முதல்வர் முன்னால் நிறுத்தும் அதிசயம் நிகழும்.

ஜோசப் அவர்கள் நம் பரிந்துரைகளைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அவற்றைச் செயல்படுத்துவார் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம்.

வாழ்க நம் முதல்வர்! தொடர்க அவரின் நல்லாட்சி!!