//இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 26 வயதான ஐசக் வால்டெஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்தில் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் குலுங்கிச் சாய்ந்ததுடன் தலை தரையில் மோதியது. இதையடுத்து அவர் சுயநினைவை இழந்தார். பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது தலை பலமாகத் தரையில் மோதியதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
அவர் 'யெகோவாவின் சாட்சிகள்'(Jehovah's Witness) என்ற கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். மத நம்பிக்கை காரணமாக, ‘ரத்தம் செலுத்தும் எந்தவிதமான சிகிச்சையையும் ஏற்கமாட்டேன்’ என்பதைக் குறிக்கும் 'ரத்தம் வேண்டாம்' என்ற அட்டையை அவர் வைத்திருந்தார்.
ஐசக் மீண்டும் சுயநினைவுக்குத் திரும்பியதால் பேசத் தொடங்கினார்; இருப்பினும், ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்கக் கூடாது என்ற தனது மத நம்பிக்கையில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், அவர் மீண்டும் கோமா நிலைக்குச் சென்றார். அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.
வாழ்நாள் முழுவதும் 'யெகோவாவின் சாட்சிகள்' மத நம்பிக்கையைப் பின்பற்றி வந்த ஐசக்கின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, ரத்தம் செலுத்த வேண்டிய அறுவைச் சிகிச்சை வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் முடிவெடுத்ததால், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி, மருத்துவர்கள் ஐசக்கிற்கு அளிக்கப்பட்டுவந்த உயிர் காக்கும் மருத்துவ உதவியை நிறுத்தியபோது அவர் உயிரிழந்தார்//.
***உலக அளவில், கடவுளின் இருப்பே ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், உடம்பில் ரத்தம் செலுத்துவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது என்று இவர்கள் நம்புவது அறிவீனத்தின் உச்சம் ஆகும்.
இதன் மூலம், மனித உயிர்களைக் கொல்லும் படுமூடத்தனங்களை மக்கள் மீது திணிக்கும் மதங்களில், கிறித்தவ மதமும்['யெகோவாவின் சாட்சிகள்' பிரிவு] ஒன்று என்பது உறுதியாகிறது.
சிறிதளவில் நன்மைகளையும் பெருமளவில் தீமைகளை விளைவிக்கிற மதங்களை[கிறித்தவம் உட்பட] முற்றிலுமாய்ப் புறக்கணித்து, சிந்திக்கும் அறிவையும், தன்னம்பிக்கையையும், மனிதாபிமானத்தையும் வளர்ப்பதில் முழுக் கவனம் செலுத்துவதே மனிதர்கள் மகிழ்வுடன் வாழ்வதற்கான ஆகச் சிறந்த வழியாகும்.
'யெகோவாவின் சாட்சிகள்'... முக்கியத் தகவல்கள்[இணையம்]:
- கடவுளின் பெயர்: இவர்கள் கடவுளை "யெகோவா" என்ற பெயரால் மட்டுமே அழைக்கிறார்கள்.
- இயேசு கிறிஸ்து: இயேசுவை கடவுளாகப் பார்க்காமல், கடவுளால் படைக்கப்பட்ட அவருடைய முதல் குமாரனாகக் கருதுகின்றனர்.
- மரணத்திற்குப் பின் வாழ்வு: நரகம் என்ற ஒன்று கிடையாது என்றும், பூமியே ஒரு நாள் புனித வாழ்விடமாக மாறும் என்றும், அதில் தகுதியானவர்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் நம்புகின்றனர்.
- பைபிள்: இவர்கள் 'புதிய உலக மொழிபெயர்ப்பு'(New World Translation) என்ற தங்களின் சொந்த பைபிள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
- இரத்த தானம் மறுப்பு: பைபிள் கட்டளைகளின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும் உடலுக்குள் இரத்தம் ஏற்றுவதை(Blood Transfusion) இவர்கள் முற்றிலுமாக மறுக்கிறார்கள். மருத்துவமனைகளில் மாற்றுச் சிகிச்சை முறைகளையே நாடுகின்றனர்.
- மதச்சார்பின்மை: இவர்கள் எந்த நாட்டின் அரசியலிலும் ஈடுபடுவதில்லை; ஓட்டுப் போடுவதில்லை; இராணுவத்தில் சேருவதில்லை.
- பண்டிகைகள் தவிர்த்தல்: கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற மதப் பண்டிகைகளையோ, பிறந்தநாள்(Birthdays)களையோ, தேசிய விழாக்களையோ இவர்கள் கொண்டாடுவதில்லை.
