புதன், 4 நவம்பர், 2026

அந்திமப் பருவத்திலும் அறிவாற்றலைத் தக்கவைக்கச் சில எளிய பயிற்சிகள்!

கால்களுக்கு வலிமையூட்டும் பயிற்சிகள், வயது அதிகரிக்கும்போது அறிவாற்றல் குறையாமல் பாதுகாப்பதாகவும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி மூளையின் ஆரோக்கியத்தைப் பேணுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சில பயிற்சிகள்:

1.உடம்பை[பின்பக்கம்]ச் சுவரில் சாய்த்து நின்று, நிதானமா அதைத் தரையை நோக்கிச் சரித்து ஒரு நிமிடம்[பயிற்சியின் தொடக்கத்தில் சற்றே குறைவாகவும் இருக்கலாம்] குந்தியிருத்தல்[முழங்கால்களை மடக்கிய நிலையில்].


2.சுவரில் உள்ளங்கைகளைப் பதித்தவாறு[விழாமலிருக்க] திடமாக நின்று, கெண்டைக் காலை உயர்த்துதல்.


3.ஒரு நிமிடம் அவ்வாறு நின்றுவிட்டு, மெதுவாக உடம்பைச் சரித்து மீண்டும் குந்துதல்.


4.சுவரில் சாய்ந்தவாறு சில நிமிடங்கள் ஒற்றைக் காலில்[கால்களை மாற்றி மாற்றி] நிற்பது.

இந்தப் பயிற்சிகள் மேற்குறிப்பிடப்பட்ட நன்மைகளுடன், நரம்புகளை வலிமைப்படுத்தி நடமாடும் திறனைப் பாதுகாப்பதற்கும், உடல்நலத்தைப் பேணுவதற்கும், கீழே விழுவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கும் பயன்படுகின்றன.


உடல்நலத்தைப் பொருத்துப் பயிற்சியின் எண்ணிக்கை கூடுதலாகவோ குறைவாகவோ அமையலாம். பயிற்சிகளைக் காலை நேரங்களில் செய்வது ஏற்புடையது.

[உதவி: இணையம்]

செவ்வாய், 3 நவம்பர், 2026

‘தமிழ்நாடு’வை ‘வெற்றி நாடு’ ஆக மாற்றுங்கள் முதல்வர் அவர்களே!

முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவின் கௌரவப் பெயரான ‘அம்மா’ 15க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கும்[எ-டு: அம்மா உணவகம்], மு. கருணாநிதியின் சிறப்புப் பெயரான ‘கலைஞர்’ சுமார் 10 திட்டங்களுக்கும் சூட்டப்பட்டுள்ளன.

மக்கள் மனங்களில் தங்களின் நினைவு நீங்காத இடம்பெறுதல் வேண்டும் என்னும் இவர்களின் ஆசை..... அல்ல, வெறி இதற்குக் காரணம் எனலாம்.

முதல்வர் ஜோசப்பும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.

‘வெற்றிப் பயணத் திட்டம், வெற்றி வீடு திட்டம், வெற்றி மடிக்கணினித் திட்டம், வெற்றி தொழில் முனைவோர் திட்டம்... ‘ என்றிப்படி, ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறே மாதங்களில், தான் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்கெல்லாம், தவறாமல் ‘வெற்றி’ சேர்ப்பதைத் தன் முக்கியக் கடமையாகக்கியுள்ளார் இவர்.

தொடரும் இவரின் ஆட்சியில் இந்த எண்ணிக்கை மிக மிகப் பலவாகும் என்பதில் சந்தேகமில்லை.

அடைமொழி சேர்த்தல் ஒருபுறம் இருக்க.....

பெரும்பாலான பெற்றோர்கள் தம் பிள்ளைகளை ஆங்கிலத்தில் பாடம் கற்பிக்கும்[ஆங்கில மீடியம்] பள்ளிகளில் சேர்ப்பது அதிகரிக்கிறது. நல்ல நல்ல தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருக்க, ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதைப் பெருமையாக நினைப்போரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது[100% உண்மை].

இவை போன்ற இன்னும் பல காரணங்களைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால், தமிழ்நாடு என்னும் பெயரில் உள்ள ‘தமிழ்’ஐ நீக்கிவிடுவது உத்தமம் என்று தோன்றுகிறது. இதனால், தமிழின் பரிதாப நிலையை எண்ணி எண்ணி மனம் குமைவது தவிர்க்கப்படும்.

எனவே, உடனடியாக, ‘தமிழ்நாடு’ என்னும் சொல்லில் உள்ள ‘தமிழ்’ஐ நீக்கிவிட்டு, ‘வெற்றி என்னும் சொல் சேர்த்து, தமிழ்நாட்டை ‘வெற்றி நாடு’ ஆக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜோசப் அவர்களைப் பணிவுடன் வேண்டுகிறோம்!

தமிழ்நாடே ‘வெற்றி நாடு’ ஆகும்போது, முதல்வர் தீட்டிச் செயல்படுத்தும் அத்தனைத் திட்டங்களும் வெற்றி பெறும் என்பதால், ஒவ்வொரு திட்டத்திலும் ‘வெற்றி’ சேர்த்து, மக்களை மண்டை காய வைப்பது தவிர்க்கப்படும்.

வாழ்க ‘வெற்றி நாடு’! வெல்க முதல்வர் ஜோசப்!!