வியாழன், 11 டிசம்பர், 2025

பாரதியின் ‘பகற்கனவு’ பலிக்குமா? எப்போது?

“தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி.

கோடிக்கணக்கில் மனிதர்கள் வாழும் உலகில் ஒரே ஒருவனுக்கு உணவில்லை என்பதற்காக, ஒட்டுமொத்த உலகையும் அழிப்பதென்பது அறிவுடைமை ஆகுமா?

அறிவுடைமை ஆகாது என்பது பாரதிக்கும் தெரிந்திருக்கும்.

பட்டினிச் சாவின் கொடூரத்தை முழுமையாக அனுமானித்ததன் விளைவாகவே இப்படிப் பொங்கியிருக்கிறார்.

ஒரு தனி மனிதன் முதுமை காரணமாகவோ, தீராத நோய்களின் தாக்குதல் காரணமாகவோ மரணிப்பதை எவராலும் தடுக்க இயலாது. ஆனால், பட்டினியால் சாவதைத் தடுப்பது சாத்தியம்.

மனித இனம் அதைத் தன் தலையாய கடமையாகக் கருதிச் செயல்படுதல் வேண்டும்.  செயல்படத் தவறினால், அது இருந்துகொண்டிருப்பதைக் காட்டிலும் அழிவதே மேல் என்பது பாரதியின் எண்ணம். எனவேதான்.....

“ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கொந்தளித்துக் குமுறியிருக்கிறார்.

அந்தப் பாரதி இன்று இல்லை.

ஆனாலும், அவர் விட்டுச்சென்ற அக்கினி வார்த்தைகள் உயிர்ப்புடன் இருப்பதால், காலப்போக்கில் புரட்சி மனம் படைத்தப் புதியப் புதியப் பாரதிகள் தோன்றுவார்கள்; “பட்டினிச் சாவு இல்லாத புதியதோர் உலகம் செய்வோம்” என்று விண்ணதிர முழக்கமிடுவார்கள்.

இது மக்கள் அனைவரின் மனங்களிலும் எதிரொலிக்கும்.

ஆதிக்க வெறி, மத வெறி, பக்தி வெறி, இன வெறி என்று மனித இனத்தைச் சீரழிக்கும் வெறித்தனங்கள் அழிந்தொழிய, மனித நேயமும், உயர் பண்புகளும், நற்குணங்களும் செழித்து வளரும்.

இதன் விளைவாக, உண்ண உணவில்லை என்று எவரும் வருந்தும் அவலம் இல்லாமல்போகும். ‘பட்டினிச் சாவு’ என்பது மனித இனம் அறிந்திராத  ஒன்றாக ஆகும்.

மனிதாபிமானக் கவிஞன் பாரதியின் நினைவு மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்திருப்பதாக!
                                   *   *   *   *   *
***சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, 11 திசம்பர் 1882[பிறந்த நாள்] – 11 செப்டம்பர் 1921[விக்கிப்பீடியா].

புதன், 10 டிசம்பர், 2025

வாக்குத் திருடர்களை விரட்டியடிக்க ஒருங்கிணைந்து முழங்குவீர் “வந்தேமாதரம்”!

‘வந்தேமாதரம்’{தாயே[இந்தியா] வணங்குகிறோம்} தொடர்பான விவாதம் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெறுகிறது.*

விவாதத்தின் முடிவு எதுவாயினும், நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயரை விரட்டியடிக்க வந்தேமாதரமும் பயன்பட்டது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால்,

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திர நாடாக ஆன இந்தியாவை, பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக வாக்குத் திருடர்கள்[நிரூபணம்: ராகுல்காந்தி] கைப்பற்றி ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.

தங்களின் ஆதிக்கம் தொடர்வதற்காக, தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றைத் தம் வசப்படுத்தி, தங்களின் அடாவடித்தனங்களைக் கண்டிக்கும் எதிர்க்கட்சியினரைப் பலவீனப்படுத்துதல் மட்டுமல்லாமல், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்தல், இந்தியைத் திணித்து மாநில மொழிகளை அழித்தல் போன்ற அட்டூழியங்களைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

அவர்களை இந்த மண்ணைவிட்டே விரட்டியடிக்க, ஆங்கிலேயரை விரட்டியடிக்கப் பயன்பட்ட அதே ‘வந்தேமாதரம்’ முழக்கம் இனியும் தேவைப்படுகிறது.

எனவே முழங்குவீர், “வந்தேமாதரம்... வந்தேமாதரம்... வந்தேமாதரம்”! 

*https://www.msn.com/en-in/news/india/amit-shah-hits-back-at-priyanka-gandhi-for-tying-vande-mataram-debate-to-bengal-polls-nobody-is-scared-of/ar-AA1RZJEu?ocid=msedgdhp&pc=NMTS&cvid=a32bfe8cf6f04524b8bb99410889bd3e&ei=14